/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய குட்டி விமானம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு லாரியில் சேலம் சென்றது
/
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய குட்டி விமானம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு லாரியில் சேலம் சென்றது
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய குட்டி விமானம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு லாரியில் சேலம் சென்றது
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய குட்டி விமானம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு லாரியில் சேலம் சென்றது
ADDED : நவ 15, 2025 01:32 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நெடுஞ்சாலையில் இறக்கப்பட்ட சிறிய ரக பயிற்சி விமானம், இறக்கைகள் கழற்றப்பட்டு, இன்ஜின் தனியாகவும், இறக்கைகள் தனியாகவும் பேக் செய்யப்பட்டு, கன்டெய்னர் லாரியில் சேலம் கொண்டு செல்லப்பட்டது.
சேலத்தை சேர்ந்த தனியார் விமானி பயிற்சி பள்ளி விமான பயிற்சியாளர் ராகுல், 30, பயிற்சி பைலட் ஆசீர், 27, ஆகியோர் நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில் சேலத்தில் இருந்து பயிற்சி பெறுவதற்காக, சேலம், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக வான்வெளியில் காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, விமானத்தை, திருச்சி - -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை நடுவில் பாதுகாப்பாக விமானி தரை இறக்கினார்.
விமானத்தின் முன் பக்கத்தில் இருந்த காற்றாடி முறிந்து இருந்ததும், எரிபொருள் கசிவு ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
விமானி ராகுல், விமானத்தை பொதுமக்கள் உதவியுடன் 10 மீட்டர் துாரத்திற்கு தள்ளிக்கொண்டு வந்து கிராமத்திற்குள் செல்லும் சாலையில் திருப்பி நிறுத்தினார். இதனால், ஒரு மணி நேரத்திற்கு பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
தொடர்ந்து, போலீசார் மற்றும் விமான துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பயிற்சி விமானம் நெடுஞ்சாலையில் தரையிறங்கியதை கேள்விப்பட்ட பொதுமக்கள் விமானத்தை பார்த்த வண்ணம் இருந்ததோடு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜூ மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விமான போக்குவரத்து இயக்குநரக உதவி இயக்குநர் ஜான்பிரதீப் தலைமையில், அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்து, விமான பயிற்சியாளரிடமும், பயிற்சி பெற்றவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
ஒரு டன் எடை கொண்ட சிறிய ரக விமானம், 200 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு கொண்டது. அதை வைத்து, 6 மணி நேரம் விமானத்தை இயக்க முடியும்.
அந்த விமானத்தின் இரண்டு இறக்கைகளில் ஒருபுறம், 100 லிட்டரும் மற்றொருபுறம், 70 லிட்டரும் என மொத்தம், 170 லிட்டர் எரி பொருள் இருந்தது. அந்த எரிபொருள் முழுதையும் வெளியே எடுத்தனர்.
கிரேன் உதவியுடன் இரண்டு இறக்கைகளையும் தனியாக கழற்றி விட்டு, விமானத்தின் இன்ஜின் மற்றும் இறக்கைகள் பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டது.
இவற்றை கிரேன் மூலமாக பெரிய கன்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, சேலம் கொண்டு செல்லப்பட்டது.

