/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நின்ற கார் மீது தி.மு.க., நிர்வாகி கார் மோதல்; அய்யப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் பலி
/
நின்ற கார் மீது தி.மு.க., நிர்வாகி கார் மோதல்; அய்யப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் பலி
நின்ற கார் மீது தி.மு.க., நிர்வாகி கார் மோதல்; அய்யப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் பலி
நின்ற கார் மீது தி.மு.க., நிர்வாகி கார் மோதல்; அய்யப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் பலி
ADDED : டிச 07, 2025 05:19 AM

ராமநாதபுரம்: கிழக்கு கடற்கரை சாலையில் சாலையோரம் நின்ற ஆந்திர அய்யப்ப பக்தர்கள் கார் மீது, தி.மு.க., நிர்வாகியின் கார் மோதியதில் ஐந்து பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஐந்து பேர், திருச்செந்துார் முருகன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, குறுகலான கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றனர். கீழக்கரை அருகில் சாலையோர ஹோட்டலில் டீ குடிக்க, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு காரை நிறுத்தினர்.
அப்போது, கீழக்கரையைச் சேர்ந்த, தி.மு.க., மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரும், நகராட்சி தலைவர் சாஹனா சபிதாவின் சகோதரருமான இத்திகார் ஹசனுக்கு சொந்தமான காரை, அவரது டிரைவர் முஸ்டாக் அகமது, 30, நண்பர்களுடன் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு ஓட்டி வந்தார்.
அந்த காரில், ஹசன் செல்லவில்லை. அதிவேகமாக வந்த அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற அய்யப்ப பக்தர்களின் காரின் பின்னால் வேகமாக மோதியது.
இதில், காரை ஓட்டிய முஸ்டாக் அகமது மற்றும் நின்ற காரில் இருந்த அய்யப்ப பக்தர்கள் ராமச்சந்திர ராவ், 55, அப்பாரோ நாயுடு, 40, பண்டார சந்திரராவ் 42, ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
கீழக்கரை போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா, 45, மருத்துவமனையில் இறந்தார். படுகாயமுற்ற தி.மு.க., கீழக்கரை நகர் துணை அமைப்பாளர் அசரத் அலி, 28, மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காயமடைந்த அய்யப்ப பக்தர் உட்பட ஆறு பேர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நண்பர்களுடன் முஷ்டாக் அகமது ஏர்வாடிக்கு உணவருந்த சென்றுவிட்டு, கீழக்கரைக்கு அதிவேகமாக திரும்பி வந்தபோது, அய்யப்ப பக்தர்களின் கார் மீது மோதியது தெரியவந்தது.
இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிவேக வாகனங்களால் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.

