ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையால் தொற்று நோய் அபாயம்
ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையால் தொற்று நோய் அபாயம்
ADDED : ஜூன் 30, 2026 11:59 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார்- -கடலாடி ரோடு நிலவள வங்கி எதிரில் ரோட்டோரத்தில் குப்பை கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் பேரூராட்சி 15 வார்டுகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காந்தி சிலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட், யூனியன் அலுவலகம் வரை 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பயன்படுத்தும் குப்பையை ஆங்காங்கே தெருக்கள் ஓரத்தில் கொட்டப்பட்டு வந்தன.
இதையடுத்து துாய்மைப் பணியாளர்கள் நேரடியாக வீட்டிற்கு சென்று குப்பை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிலர் தெருக்களில் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர்.
தினந்தோறும் துாய்மைப் பணியாளர்கள் வீட்டிற்கு சென்று குப்பை வாங்கி வந்தாலும் சில தெருக்களில் சுழற்சி முறையில் குப்பை வாங்கும் நிலையில் சிலர் குப்பையை ரோட்டோரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பை குவிந்து துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.ரோட்டோரத்தில் குப்பை கொட்டக் கூடாது என பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தியும் மக்கள் கண்டு கொள்வதில்லை.
முதுகுளத்துார்--கடலாடி ரோடு நிலவள வங்கி எதிரே ரோட்டோரத்தில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. எனவே மக்கள் ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தி துாய்மைப் பணியாளர்களிடம் குப்பையை வழங்க வேண்டும். ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
