நகராட்சி வருவாய் ஆய்வாளர் வங்கி கணக்கில் ரூ.25 லட்சம்
நகராட்சி வருவாய் ஆய்வாளர் வங்கி கணக்கில் ரூ.25 லட்சம்
ADDED : ஜூலை 05, 2026 12:52 AM
ராமநாதபுரம்: தமிழகம் முழுதும், 41 மாநகராட்சிகள், நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர், நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில், அன்றைய தினம் மதியம் தொடங்கிய சோதனை, இரவு வரை நீடித்தது. இதில், கணக்கில் வராத, 3 லட்சத்து, 66,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், நகராட்சி அலுவலர்களின் வங்கி பண பரிவர்த்தனைகளை சோதனை செய்ததில், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் வங்கிக்கணக்கில், 3 ஆண்டுகளில், 25 லட்சம் ரூபாய் அளவிற்கு, சந்தேகத்திற்குரிய 'டிஜிட்டல்' பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு, உரிய ஆதாரங்கள் இல்லாததால், கார்த்திகேயனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி லஞ்ச ஒழிப்பு போலீசார், போடி நகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத, 91,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், அலுவலர்களின் மொபைல்போன்களை சோதித்ததில், 'ஜிபே' எனப்படும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வாயிலாக, 1.5 லட்சம் ரூபாய் வரவானதும் தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில், பொறியாளர் பிரிவில் கணக்கில் வராத, 32,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். பணியாளர்களின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்கள் பலரிடம் இருந்து, வரைவாளர், கணக்காளர், உதவியாளர் ஆகியோர் வங்கி கணக்கிற்கு, 8 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது.
