வைகை ஆற்றில் மணல் மாயம்: தேங்கும் கழிவு நீரால் ஊற்று நீருக்கு சிக்கல்
வைகை ஆற்றில் மணல் மாயம்: தேங்கும் கழிவு நீரால் ஊற்று நீருக்கு சிக்கல்
ADDED : ஜூலை 07, 2026 04:28 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரமாக உள்ள பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. பள்ளங்கள் கழிவுநீர் குளமாகியுள்ளதால் ஊற்றுநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றின் நீர்வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரமக்குடியில் ஒரே குடிநீர் ஆதாரமாக வைகை ஆறு இருக்கிறது. ஒவ்வொரு முறை வைகையில் தண்ணீர் வரும் நாட்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர் ஊற்றுக்கு சிக்கல் இன்றி உள்ளது.
இதன்படி 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து வீடுகளிலும் கிணறு காணப்பட்டது. தொடர்ந்து 100 அடியில் ஒவ்வொரு வீடுகளிலும் ஆழ்குழாய் அமைக்கப்பட்டது.
தற்போது 300 முதல் 500 அடி ஆழ்குழாய் அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. வைகை ஆற்றில் அரசு மணல் குவாரிகள் அமைத்ததுடன், தற்போது வரை மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. மேலும் ஒட்டு மொத்த கழிவு நீரும் வைகை ஆற்றில் விடப்படும் சூழலில் மிகப்பெரிய குட்டைகள் ஆங்காங்கே உருவெடுத்து நீர் ஊற்றுக்கு சவால் விடுகின்றன. ஒவ்வொரு துறை அதிகாரிகளும் மாற்று ஊர்களில் இருந்து பணிபுரிய வரும் சூழலில் ஏதோ சில நாட்களில் மட்டும் நடவடிக்கையில் இறங்குகின்றனர்.
இதனால் மணல் இன்றி கட்டாந்தரையாகிய வைகை ஆற்றில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி தொற்று நோய்க்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே மணல் கொள்ளையை கண்காணித்து தடுக்க வேண்டும். கழிவு நீர்தேங்குவதை தடுப்பதுடன் வைகை ஆற்றை பாதுகாக்க அனைத்து துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு புதிய கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட வேண்டும்.
