மாணவர்கள் நடவடிக்கை எல்லை மீறுவதாக போலீஸ் கலந்தாய்வில் ஆசிரியர்கள் குமுறல்
மாணவர்கள் நடவடிக்கை எல்லை மீறுவதாக போலீஸ் கலந்தாய்வில் ஆசிரியர்கள் குமுறல்
ADDED : ஆக 31, 2026 12:24 AM
திருவாடானை: திருவாடானையில் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் சில மாணவர்களின் நடவடிக்கை எல்லை மீறுவதாக போலீசாரிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
திருவாடானையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் நடந்தது. பள்ளிகளில் மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுப்பது மற்றும் பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் டி.எஸ்.பி., சீனிவாசன் பேசியதாவது: மாணவர்கள் வழிதவறி செல்வதை தடுப்பது போலீசாரின் கடமை மட்டுமல்ல ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டு பொறுப்பு. புகையிலை மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு அருகில் போதை பொருட்களை விற்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சில வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது.
ஆசிரியர்களை மதிக்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, சில சமூக விரோதிகளின் தொடர்பில் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்குள் இருக்கும் மற்ற மாணவர்களை தவறான பாதைக்கு இழுக்க முயல்கின்றனர்.
சிலர் ஆசிரியர்களையே மிரட்டும் தோரணையில் பேசுகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது போன்ற பல்வேறு புகார்களை தெரிவித்த னர்.
பள்ளி முடிந்து தேவையின்றி வெளியே சுற்றும் மாணவர்களை கண்காணித்து எச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனைகள் அதிகரிக்கப்படும்.
போலீசாருக்கு ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று டி.எஸ்.பி., கூறினார்.
