/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கடலோர மாவட்டங்களுக்கு செல்லும் திருப்பாச்சேத்தி தென்னந்தட்டி
/
கடலோர மாவட்டங்களுக்கு செல்லும் திருப்பாச்சேத்தி தென்னந்தட்டி
கடலோர மாவட்டங்களுக்கு செல்லும் திருப்பாச்சேத்தி தென்னந்தட்டி
கடலோர மாவட்டங்களுக்கு செல்லும் திருப்பாச்சேத்தி தென்னந்தட்டி
ADDED : ஏப் 27, 2024 04:27 AM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் இருந்து கடலோர மாவட்டங்களில் வெப்பத்தை தணிக்க தென்னந்தட்டிகள் அதிகளவில் கொண்டு செல்லப்படுவதால் தயாரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
வைகை ஆற்றங்கரையில் உள்ள திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. விவசாய பணி இல்லாத நிலையில் கூலி தொழிலாளர்கள் பலரும் தென்னந்தட்டிகள் பின்னும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆண், பெண், மாணவ, மாணவியர்கள் என பலரும் தென்னந்தட்டிகள் பின்னும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் முழுவதும் நபர் ஒருவர் எட்டு தட்டி வரை பின்னுகின்றனர். வியாபாரிகள் பலரும் மட்டைகளை மொத்தமாக வாங்கி வந்து தொழிலாளர்கள் இருக்கும் பகுதியில் குவித்து வைத்து விடுகின்றனர். தேவைக்கு ஏற்ப தொழிலாளர்கள் தட்டிகள் பின்னுகின்றனர்.
ஒரு மூணு மடை தட்டிக்கு நாற்பது ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. தட்டிகள் ரெடியான உடன் வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் வந்து தட்டிகளை எடுத்து சென்று ராமேஸ்வரம், சாயல்குடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.
கடலோர பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் தென்னந்தட்டிகளை வைத்து ஆங்காங்கே தற்காலிக குடிசைகள் அமைத்து வருகின்றனர்.
தென்னந்தட்டிகளின் தேவை அதிகம் என்பதால் திருப்பாச்சேத்தி பகுதியில் இருந்து வாங்கி செல்கின்றனர்.
அருண்குமார் கூறுகையில்: அதிகாலையில் எழுந்து மூன்று தட்டிகள் வரை பின்னிவிட்டு கல்லுாரி சென்று விடுவேன், மாலையில் வந்து மூன்று தட்டிகள் வரை பின்னுவேன், தினசரி தட்டிகள் பின்னும் போது அன்றாடம் கூலி வழங்கி விடுகின்றனர். இதனால் ஓரளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது, என்றார்.
வியாபாரி அய்யம்மாள் கூறுகையில்: ஒரு மினி சரக்கு வேனில் 300 தட்டிகள் வரை ஏற்றலாம், கடற்கரை பகுதியில் உள்ள வீடுகள், மீனவர்கள் பலரும் தென்னந்தட்டிகளை விரும்பி வாங்குகின்றனர்.
அவர்களுக்காக மிக நெருக்கமாக தட்டிகள் பின்னி வாங்கி சென்று விற்பனை செய்கிறோம், என்றார்.

