/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நோய் தொற்றால் விற்பனைக்கு வந்த மாடுகள்
/
நோய் தொற்றால் விற்பனைக்கு வந்த மாடுகள்
ADDED : நவ 12, 2025 11:55 PM

திருப்புவனம்: திருப்புவனம் மாட்டுச்சந்தையில் நேற்று அதிகளவு பசுமாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை ஆட்டுச் சந்தையும், புதன்கிழமை மாட்டுச்சந்தையும் நடைபெறும், மதுரை, தேனி, கேரளா, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மாடு, கன்று வாங்க வருவார்கள்.
கால்நடை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் காளை கன்றுகளை விற்பனை செய்து விடுவார்கள், உழவு பணி, பாரம் இழுக்கும் வண்டிகள் இல்லாததால் காளை கன்றுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வது வழக்கம்.
நேற்றைய சந்தையில் கறவை மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. தட்டான்குளம், சக்குடி, கீழடி, கொந்தகை, இலந்தைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கறவை மாடுகள் எத்தனை கன்றுகள் வரை ஈன்றுள்ளன என்பதை வைத்து விலை நிர்ணயம் செய்வார்கள், குறைந்த பட்சம் கறவை மாடுகள் 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும் ஆனால் நேற்றைய சந்தையில் கறவை மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்ததால் விலை குறைவாக காணப்பட்டது.
மழை காலங்களில் வளர்ப்பிற்காக கறவை மாடுகள் பெரும்பாலும் வாங்க மாட்டார்கள், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங் களில் விவசாய பணிகள் நடைபெறும், வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாது, மழை காலங்களில் கறவை மாடுகளுக்கு கானை நோய் தாக்கும், எனவே கறவை மாடு வளர்ப்பவர்கள் அதிகளவில் மாடுகளை விற்பனை செய்ய வந்திருந்தனர்.
தட்டான்குளம் மாயக்கண்ணன் கூறுகையில்: மழை காலங்களில் மாடுகளுக்கு நோய் தொற்று ஏற்படும், மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால் மட்டுமே பால் உற்பத்தி அதிகரிக்கும், விவசாயம் நடைபெறுவதால் மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாது, மேலும் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க சக்குடிக்கு தான் கொண்டு செல்ல முடியும், தட்டான்குளம், கழுகேர்கடையில் கறவை மாடுகள் அதிகம் இருந்தாலும் கால்நடை மருந்தகங்கள் இல்லை எனவே வேறு வழியின்றி 35 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள கறவை மாட்டை 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளேன், என்றார்.

