பழுதான பேட்டரி வாகனங்கள் நிதி ஒதுக்கியும் பணியில் தொய்வு
பழுதான பேட்டரி வாகனங்கள் நிதி ஒதுக்கியும் பணியில் தொய்வு
ADDED : ஜூலை 07, 2026 04:31 AM

காரைக்குடி: காரைக்குடி சங்கரா புரத்தில், நிதி ஒதுக்கியும் பழுதாகி கிடக்கும் பேட்டரி வாகனங்களை சரி செய்யாததால் துாய்மை பணியில் சிக்கல் நிலவுகிறது.
தமிழகத்தின் இரண் டாவது மிகப்பெரிய ஊராட்சியாக இருந்த சங்கராபுரம் ஊராட்சி யானது காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும், ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் வரக்கூடிய பகுதியாகவும் உள்ளது.
இங்கு ஒப்பந்த மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 50 க்கும் மேற்பட்டோரும், தூய்மை காவலர் 30 க்கும் மேற்பட்டோரும் வேலை செய்து வந்தனர்.
குப்பை சேகரிக்க 30 பேட்டரி வண்டிகள் வழங்கப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதாகி கிடக்கிறது. இதனால் வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணியில் சிக்கல் நிலவி வருகிறது.
பேட்டரி வாகனங்களை சரிசெய்ய, மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கியும் இதுவரை பழுது நீக்கும் பணி நடைபெறாததால் பேட்டரி வாகனங்கள் வீணாகி வருவதோடு தூய்மை பணியிலும் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சங்கரா புரத்தில் பழுதாகி கிடக்கும் பேட்டரி வாகனங்களை பழுது நீக்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ஒப்பந்தம் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒப்பந்த பணிகள் முடிந்ததும் உடனடியாக பேட்டரி வாகனங்கள் சரி செய்யப்படும்.
