ADDED : மார் 17, 2024 11:50 PM

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் இருந்த நிலையில் நான்கு வழிச்சாலை, அகலரயில்பாதை, ஆக்ரமிப்பு என கூறி பெரும்பாலான மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. இருக்கும் ஒருசில மரங்களை நம்பி இப்பகுதியில் விளையும் தேங்காய்கள் குஜராத், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்படுகிறது.
மேலும் தென்னை மட்டைகளில் இருந்து விசிறி, கிடுகு, மூனுமடை தட்டி, விளக்குமாறு, பாளையில் இருந்து கயிறுகள், பிரஷ்கள் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக வெள்ளை ஈ என்ற வெள்ளை பாப்பாத்தியின் தாக்குதலால் தென்னை மட்டைகள் காய்ந்து ஓலைகள் பச்சை நிறத்தை இழந்து கருகி மட்டைகள் உதிர்வதால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க வெள்ளை ஈ வெகு வேகமாக பரவி வருகிறது.
தென்னந்தோப்புகளில் உள்ள மரங்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன் வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களிலும் வெள்ளை ஈ தாக்குதல் பரவி வருகிறது.
மரங்களின் மட்டைகள் உதிர்வதால் 50 வருடங்கள் பலன் தரகூடிய மரங்கள் தொடர்ச்சியாக கருகி வருகின்றன. இந்த நோய் எளிதில் பரவுவதால் மரங்கள் பாதிக்கப்பட்டு தென்னை விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்ன.மருந்துகள் தெளித்தாலும் நோய் கட்டுப்படுத்த முடியவில்லை எனவே வேளான் துறையினர் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கருகிய தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் 40 ஆண்டு பயன்பதர கூடிய மரங்கள் கருகி பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நிவாரணம், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் குழு அமைத்து, கண்காணித்தால் மட்டுமே இழப்புகளில் இருந்து தென்னை விவசாயிகளை மீட்க முடியும்.

