/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொலை நகரமாக மாறி வரும் கல்வி நகரம்: தொடர் குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்
/
கொலை நகரமாக மாறி வரும் கல்வி நகரம்: தொடர் குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்
கொலை நகரமாக மாறி வரும் கல்வி நகரம்: தொடர் குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்
கொலை நகரமாக மாறி வரும் கல்வி நகரம்: தொடர் குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்
ADDED : நவ 14, 2025 04:21 AM

செட்டிநாடு பகுதியான காரைக்குடி பாரம்பரிய நகரத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது. கட்டடக்கலைக்கு பெயர் பெற்ற, பிரமிக்க வைக்கும் செட்டிநாட்டு அரண்மனைகள், பங்களாக்களை காண்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
காரைக்குடியில் அழகப்பச் செட்டியாரால் அழகப்பா பல்கலை உருவாக்கப்பட்டு இன்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அழகப்பா பல்கலை, மட்டுமின்றி அழகப்பா இன்ஜி., கல்லுாரி, அழகப்பா அரசு கலைக்கல்லுாரி அழகப்பா பள்ளிகள் உட்பட பல்வேறு கல்வி மையங்களை நாடி பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் காரைக்குடிக்கு வந்து செல்கின்றனர்.காரைக்குடி நகரும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது.
அதிக இட வசதி கொண்ட போக்குவரத்து நெரிசல் இல்லாத அமைதி நகரமாக விளங்கும் காரைக்குடிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் புலம் பெயர்ந்து வருகின்றனர்.
இவ்வாறான காரைக்குடி கடந்த சில ஆண்டுகளாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நகரமாக மாறி வருகிறது.
கடந்த ஒரு வருடத்திற்குள், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து 20 க்கும் மேற்பட்ட வழிப்பறி, செயின் பறிப்பு.
முன்பகை மற்றும் மது குடித்து விட்டு நடந்த தகராறுகளில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள், கால்நடைகள் திருட்டு, மது குடித்து வாகனம் ஒட்டி விபத்து உயிரிழப்பு என போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜன.24 ஆம் தேதி காரைக்குடி முத்துப்பட்டினம் 3வது வீதியைச் சேர்ந்த, விவசாயி முத்துப்பாண்டி 54 அதலைக்கண்மாய் வயல் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது சம்பந்தமாக உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, கடந்த மார்ச்சில் காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் நிபந்தனை ஜாமின் கையெழுத்து போட்டு திரும்பிய, காரைக்குடி சேர்வார் ஊருணியை சேர்ந்த மனோஜ் 23, என்பவரை சிலர் ஓட ஓட விரட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, கடந்த மாதம் அரியக்குடியைச் சேர்ந்த, பா.ஜ.நிர்வாகியான இன்ஜினியர் பழனியப்பன் 34 என்பவரை கூலிப்படையினர் வெட்டி கொலை செய்தனர். இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இக்கொலை சம்பவம் அடங்கும் முன், தற்போது மீண்டும், காரைக்குடி மருது பாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாண்டிகுமார் மனைவி மகேஷ்வரி 38, என்பவர் காரில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காரைக்குடியில் கடந்த ஒரு வருடத்திற்குள், 4 கொலை சம்பவங்கள் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பு குறித்து அச்சமடைய தொடங்கி உள்ளனர்.
காரைக்குடி உட்கோட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு, அனைத்து மகளிர், அழகப்பாபுரம், குன்றக்குடி, பள்ளத்துார், செட்டிநாடு, சாக்கோட்டை, சோமநாதபுரம் மற்றும் குற்றப்பிரிவு என 10 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன.
இதில் போதிய போலீசார் இல்லை. இதனால் கண்காணிப்பு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. பெரும்பாலும் கொலைகள் முன்பகை காரணமாகவே உருவாகிறது.
இதுபோன்று முன்பகை ஏற்படாமல் போலீசார் முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாலே குற்றச் சம்பவங்கள் குறையும்.
ஆனால் போலீசார் பணிச்சுமை காரணமாக உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் முன்பகை கொலையில் முடிகிறது.
தவிர பல போலீஸ் ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக ஒரே போலீசார் பணி செய்வதால், வழக்குகளில் தலையிட்டு சமரசம் செய்வது, பேசி முடிப்பது என்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும் காரைக்குடி உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே மாற்றம் செய்யப்படுவதால் இவர்களுக்கு பணியிட மாற்றம் என்பது பெரிதாகத் தெரிவதில்லை.
அமைதி பூங்காவாக விளங்கும் கல்வி நகரமான காரைக்குடியில் குற்றச்சம்பவங்கள் தொடர்கதையாவதை தடுப்பதற்கு போலீசார் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

