/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல் பா.ஜ., -- த.ம.ஜ., தொண்டர்கள் மோதல்
/
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல் பா.ஜ., -- த.ம.ஜ., தொண்டர்கள் மோதல்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல் பா.ஜ., -- த.ம.ஜ., தொண்டர்கள் மோதல்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல் பா.ஜ., -- த.ம.ஜ., தொண்டர்கள் மோதல்
ADDED : டிச 07, 2025 06:46 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் சட்ட அமைச்சர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பா.ஜ., தமிழக மக்கள் ஜனநாயக(த.ம.ஜ.,) கட்சியினரிடையே ஏற்பட்ட வார்த்தை போர் மோதலாக மாறியது.
காரைக்குடியில் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.,வினர் மற்றும் அ.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர். பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவிக்க காத்திருந்தனர்.
அப்போது வெற்றிவேல் வீரவேல், பாரத்மாதா கி ஜே என பா.ஜ.,வினர் முழக்கமிட்டனர். சிலைக்கு மாலை அணிவித்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் பதிலுக்கு மதவாதத்தை வேரறுப்போம், பாசிசத்தை வேரறுப்போம் என முழங்கினர். இதனால் பா.ஜ.,வினர் மீண்டும் வெற்றிவேல் வீரவேல் முழக்கமிட்டபடி சிலை அருகில் வந்தனர். இரு தரப்புக்கும் வார்த்தை போர் முற்றி மோதல் ஏற்பட்டது. போலீசார் தடுத்து சமாதானப்படுத்தினர்.
போலீசார் நேர அட்டவணையை முறையாக கண்காணிக்காததால் ஒரே நேரத்தில் பா.ஜ., த.வெ.க., வி.சி.க., த.ம.ஜ., நாம் தமிழர் கட்சி என அனைவரும் சிலை அருகே ஒரே நேரத்தில் கூடினர். குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஏ.எஸ்.பி., ஆசிஷ் புனியா வந்தார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் கூறுகையில்,''அம்பேத்கரை முருகனுக்கு நிகராக நினைத்து வெற்றிவேல் வீரவேல் என்று கூறினோம். அப்படி சொல்லக்கூடாது என்கின்றனர். நாம் இந்தியாவில் தானே இருக்கிறோம். இங்கு பாரத் மாதா கி ஜெ., சொல்லக்கூடாது என்கின்றனர்,'' என்றார்.
த.ம.ஜ., மாவட்ட செயலாளர் அபுபக்கர் சித்திக் கூறுகையில்,''பாசிசத்தை வேரறுப்போம், ஜெய் பீம் என அம்பேத்கர் கூறிய கருத்தைத்தான் கூறினோம். பா.ஜ.,வினர் வெற்றிவேல் வீரவேல் என்றனர். அதற்கும் அம்பேத்கருக்கும் என்ன சம்பந்தம்,'' என்றார்.

