ADDED : நவ 12, 2025 11:54 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதியில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் நாற்றுக்கள் விலை வழக்கத்தை விட குறைவாகவே உள்ளது.
திருப்புத்துார் வானம் பார்த்த பூமி என்பதால் விவசாயிகள் மழைக்காக காத்திருந்து நடுகின்றனர். இதனால் பட்டம் தவறியே பலரும் நாற்று நடுகின்றனர். அதில் பலரும் நாற்றங்கால் விதை பாவி வளர்ப்பதில்லை. விலைக்கு வாங்கியே நாற்றுக்களை நடவு செய்வதுண்டு. இதனால் நாற்றங்கால் வளர்ப்பவர்கள் தேவைக்கும் மேலாக கூடுதலாகவே நாற்றங்கால் போடுவதுண்டு. கூடுதல் நாற்றுக்களை விற்பதுண்டு. 100 முடி கொண்ட குப்பம் ரூ 500 வரை விலை போகும்.
இந்த ஆண்டு தற்போது வரை தொடர்ந்து மழை சீராக பெய்யாததால் பலரும் நடவுப்பணியில் இறங்கவில்லை. இதனால் நாற்றுக்கள் விலை போக வில்லை. குப்பம் ரூ 250க்கு விற்பதற்கே நாற்றங்கால் விவசாயிகள் சிரமப் படுகின்றனர்.

