UPDATED : ஜூலை 08, 2026 03:48 AM
ADDED : ஜூலை 07, 2026 02:00 PM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு அதிகாரிகளுக்கு டப்பா வாகனம் வழங்கப்பட்டுள்ளதால் ஆய்விற்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மாவட்டத்தில் அரசு அதிகாரிகள், போலீசார், உள்ளாட்சி துறை, மருத்துவ துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மாவட்டம் முழுவதும் ஆய்விற்கு சென்று வருவதற்கு வசதியாக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட அளவு டீசலும் வழங்கப்படும், பொது விநியோக திட்ட துணை பதிவாளர் மாவட்டம் முழுவதும் உள்ள 840 ரேஷன் கடைகளை ஆய்வு செய்வதற்கு வசதியாக 1989ம் ஆண்டு ஜீப் வழங்கப்பட்டது. இதற்கு மாதம் தோறும் 125 லிட்டர் டீசலும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாதம்தோறும் 50 ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
கடத்தலின் போது பிடிபடும் பொருட்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
37 ஆண்டுகளாக வாகனத்தில் எந்த வித பராமரிப்பும் செய்யாததால் துருப்பிடித்து சேதமடைந்துள்ளது. வாகனத்தில் டயர், இன்ஜின் மட்டும் ஓரளவிற்கு இயங்குகிறது. 35 கி.மீ., வேகத்திற்கு மேல் வாகனத்தில் செல்ல முடியாது, அதற்கு மேல் வேகமாக சென்றால் வாகனத்தின் பல்வேறு பகுதி காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
இந்த வாகனத்தை இயக்க டிரைவர்கள் யாரும் முன்வருவதில்லை என்ற புகார் உள்ளது. அரசு ஊழியர்களின் வாகனங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் புதிதாக வழங்கப்படுவது வழக்கம், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 37 ஆண்டுகளாக ஒரே வாகனத்தை இயக்கி வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் பழுதடைந்த வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வழங்க வேண்டும்.
