/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
வெண்ணாறு 1 கி.மீ., துாரம் தான் தண்ணீருக்காக மக்கள் போராட்டம்
/
வெண்ணாறு 1 கி.மீ., துாரம் தான் தண்ணீருக்காக மக்கள் போராட்டம்
வெண்ணாறு 1 கி.மீ., துாரம் தான் தண்ணீருக்காக மக்கள் போராட்டம்
வெண்ணாறு 1 கி.மீ., துாரம் தான் தண்ணீருக்காக மக்கள் போராட்டம்
ADDED : ஏப் 28, 2024 01:57 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரில் உள்ள அக்ரஹார தெரு, நடுத்தெரு, சந்துத்தெருவில் 800க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதியினர் அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பெண்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் நேற்று காலை பூதலுார் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூதலுார் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் மறியலை கைவிடப் போவது இல்லை என போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து, பூதலுார் தாசில்தார் மரிய ஜோசப் சம்பவ இடத்திற்கு வந்து, விரைவில் தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததால், பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
எங்கள் ஊரில் இருந்து வெண்ணாறு, 1 கி.மீ., துாரம் தான். இருப்பினும் ஆற்றில் மணல் அள்ளியதால், நாணல் மண்டி போனது. எங்கள் பகுதியை சுற்றியுள்ள ஏரி, குளங்கள் எல்லாம் போதிய அளவில் பராமரிப்பு இல்லாமல் போனதாலும் தண்ணீர் இல்லை.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக எங்கள் பகுதிகளில் பாதிக்கப்பட்டு, குடிநீர் பிரச்னை எழுந்துள்ளது. ஆற்றுக்கு அருகே எங்கள் ஊர் இருந்தாலும் தண்ணீர் உப்பு சுவையுடன் தான் உள்ளது. அதுவும் குறைந்த அளவில் தான் வருகிறது.
இவ்வாறு தெரிவித்தனர்.

