/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்து வரும் கண்ணகி கோயில் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா
/
சேதமடைந்து வரும் கண்ணகி கோயில் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா
சேதமடைந்து வரும் கண்ணகி கோயில் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா
சேதமடைந்து வரும் கண்ணகி கோயில் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா
ADDED : ஏப் 28, 2024 04:15 AM

கூடலுார், : வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் ஆண்டுதோறும் சேதமடைந்து வருவது அதிகரித்துக் கொண்டே உள்ளது. முழுமையாக அழிவதற்குள் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லையான விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக பக்தர்கள் நினைத்த போதெல்லாம் சென்று பொங்கல் வைத்து வழிபட்டதுடன் சிலப்பதிகாரம் முற்றோதலும் செய்திருக்கிறார்கள்.
கெடுபிடிகள்
ஆனால் தற்போது இந்த நிலை மாறி ஆண்டிற்கு ஒரு முறை சித்ரா பவுர்ணமி தினத்தில் மட்டுமே வழிபட முடியும். அதுவும் கேரள வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில்தான் கொண்டாட முடியும் என மாறிவிட்டது. தமிழக அதிகாரிகள் கூட்டுக்குழு கூட்டம் நடத்தி விழா கொண்டாடினாலும் கேரள வனத்துறையின் கெடுபிடிகளை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.
ஒரு நாள் மட்டும் நடக்கும் விழாவிற்கு பின், கோயிலை யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆண்டுதோறும் கோயில் சேதமடைந்து வருவது அதிகரித்துள்ளது. கற்கள் பெயர்ந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. கண்ணகி சிலையின் கால் பகுதி மட்டும் உள்ளது.
சித்ரா பவுர்ணமி தினத்தன்று சந்தணத்தால் கண்ணகி உருவத்தை செய்து வணங்கி வருகின்றனர். ஏழு ஆண்டுகளுக்கு முன் கோயிலை சீரமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியும் கேரள தொல்லியல் துறை, கேரள வனத்துறையினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் சுற்றுச் சுவர் மட்டும் கட்ட துவங்கி தொடர்ந்து சீரமைப்பு பணிகள் முடங்கின.
பளியன்குடி பாதை
தமிழக பக்தர்கள் சுதந்திரமாக சென்று வழிபட பளியன்குடி வழியாக தமிழக வனப்பகுதியில் ரோடு அமைப்பதே தீர்வாகும். சமீபத்தில் சர்வே பணிக்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தெல்லுக்குடி பாதையில் சர்வே பணிகள் பெயரளவு நடந்து அதுவும் முடங்கியுள்ளது.
வாக்குறுதி
'தேனி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கண்ணகி கோயிலை சீரமைத்து பளியன்குடி வழியாக கண்டிப்பாக பாதை அமைத்துத் தருவேன்' என, வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர்.
வெற்றி பெற்றதும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

