தேனியில் ஆக்கிரமிப்பு அகற்றம் பொதுமக்கள் வரவேற்பு ஆக்கிரமிப்பு இடங்களில் நடைபாதைக்கு ஏற்பாடு
தேனியில் ஆக்கிரமிப்பு அகற்றம் பொதுமக்கள் வரவேற்பு ஆக்கிரமிப்பு இடங்களில் நடைபாதைக்கு ஏற்பாடு
ADDED : செப் 03, 2026 12:26 AM

தேனி: தேனியில் பெரியகுளம் ரோட்டில் நெடுஞ்சாலை துறையின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதியில் நடைபாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனியில் பெரியகுளம் ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ரோட்டின் இருபுறமும் சென்டர் மீடியனுடன் சேர்த்து 16 மீ., அகல ரோடு உள்ளது. இது தவிர இருபுறமும் 5 முதல் 10 மீ., அகலம் ரோடு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.
உதாரணமாக ரோட்டுடன் சேர்த்து நேருசிலை அருகே மொத்த அகலம் 38 மீ., தேனி போலீஸ் ஸ்டேஷன் அருகே 45 மீ., பெத்தாட்சி விநாயகர் கோயில் அருகே 22 மீ., உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும். மெயின் ரோட்டில் பொதுமக்கள் வசதிக்காக சிமென்ட் பேவர் பிளாக் கற்கள் அமைத்து கொடுத்த இடத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகள் அமைத்தும், ஏற்கனவே உள்ள கடைகளை நீட்டித்தும் ஆக்கிரமித்தனர். இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த பணிக்கு பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் திருந்த வேண்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக ஒரு பகுதியில் துவங்கி மற்றொரு பகுதிக்கு வருவதற்குள் மீண்டும் ஆக்கிரமிக்கின்றனர்.
ஆக்கிரமிப்பாளர்களாக திருந்த வேண்டும். கடைகளுக்கு முன் சிமென்ட் தளம் அமைத்ததை அகற்றி உள்ளோம்.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இருபுறமும் பதித்துள்ள பேவர் பிளாக் கற்களை ஆக்கிரமிக்கும் கடைகள், நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் மக்களுக்கு நடைபாதை வசதி செய்யவும், இவை பொம்மையகவுண்டன்பட்டி வரை நீடிக்க ஆலோசித்து வருகின்றோம் என்றார்.
