/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சிகளில் நிதி ஆதாரமின்றி வளர்ச்சிப் பணிகள் முடக்கம்
/
ஊராட்சிகளில் நிதி ஆதாரமின்றி வளர்ச்சிப் பணிகள் முடக்கம்
ஊராட்சிகளில் நிதி ஆதாரமின்றி வளர்ச்சிப் பணிகள் முடக்கம்
ஊராட்சிகளில் நிதி ஆதாரமின்றி வளர்ச்சிப் பணிகள் முடக்கம்
ADDED : டிச 09, 2025 06:34 AM
ஆண்டிபட்டி: ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையால் வளர்ச்சிப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் பெரும்பாலான ஊராட்சிகள் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டை நம்பியே வளர்ச்சி பணிகள், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்கள் தொகை அடிப்படையில் மாநில அரசு மூலம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்தில் பணியாளர்களுக்கான சம்பளம் குடிநீர் சுகாதார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசு மூலம் வழங்கப்படும் நிதிக்குழு மானியங்கள் மூலம் ஊராட்சிகளில் குடிநீர், ரோடு, வடிகால் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது மாநில அரசு மூலம் கிடைக்கும் நிதி குறைவாக இருப்பதால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பதவி முடிந்து ஓராண்டாகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால் இந்த ஆண்டுக்கான 16 வது நிதுக்குழு மானியம் கிடைக்கவில்லை. இதனால் ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: பெரும்பாலான ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி மட்டுமே நிதி ஆதாரமாக உள்ளன. இந்த வரிகளை 100 சதவீதம் செலுத்துவதற்கு பொதுமக்கள் முன் வருவதில்லை.
நகர் பகுதியை ஒட்டி உள்ள ஊராட்சிகளில் கட்டுமான பணிகளுக்கான அனுமதி மூலம் கிடைக்கும் வரித்தொகைகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொரு ஊராட்சிக்கும் 15வது நிதிக்குழு மூலம் ரூபாய் சில லட்சங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த வகையான வேலைகளை தேர்வு செய்யலாம் என்பது குறித்த விபரங்கள் அரசு மூலம் இன்னும் கிடைக்கவில்லை.
மொத்தத்தில் கடந்த ஓராண்டாக பல ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் பராமரிப்பு பணிகள் முடங்கி கிடக்கின்றன என்றனர்.

