அடுக்குமாடி குடியிருப்புகள் பெற பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: அதிகாரிகள் எச்சரிக்கை
அடுக்குமாடி குடியிருப்புகள் பெற பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: அதிகாரிகள் எச்சரிக்கை
UPDATED : ஜூலை 01, 2026 09:41 PM
ADDED : ஜூலை 01, 2026 08:11 PM
தேனி:மாவட்டத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 ஆயிரம் வீடுகள் பொதுமக்களுக்கு ஒதுக்கப்படாமல் உள்ளது. தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். வீடுபெற யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறினர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டு பொருளாதாரத்தில் நலிவடைந்த பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வடவீரநாயக்கன்பட்டி, தப்புக்குண்டு, மீனாட்சிபுரம் வலசதுறை உள்பட 12 இடங்களில் 1230 வீடுகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டியில் 225 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. கம்பத்தில் 337 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் துவங்க உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 3427 வீடுகள் உள்ளன. சுமார் 2 ஆயிரம் வீடுகள் ஒதுக்கப்படாமல் உள்ளது.இதுபற்றி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.8 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வீட்டை மானியம் போக மீத தொகையை மட்டும் செலுத்தி குடியிருப்புகளை பெற்று கொள்ளலாம். அதற்கும் வங்கிகள் மூலம் தகுதியுள்ளவர்களுக்கு கடன் உதவி செய்யப்படுகிறது. தகுதி உடையவர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தை நேரில் அணுகலாம். விண்ணப்பத்தாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக் நகல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1 ஆகிவற்றுடன் நேரில் வரலாம். வீடு ஒதுக்கீடு பெற வங்கி பரிவர்த்தனை மூலம் அரசுக்கு பணம் செலுத்த வேண்டும். யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றார்.
