ADDED : மார் 15, 2024 06:38 AM

-பெரியகுளம் : பெரியகுளம் அருகே சோத்துப்பாறை பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் மக்கள் வீட்டு மனை வழங்க கோரி ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. இதன் மேற்பகுதி போடி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பாறை, குறவன்குழி மலை கிராமங்கள் உள்ளன. இரு கிராமத்தில் 37 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு அரசு வழங்கும் எந்த சலுகையும் சென்றடைவதில்லை. குழந்தைகள் கல்வி கேள்விக்குறியாக உள்ளது.
இதனால் பழங்குடியினர் குழந்தைகளின் படிப்பிற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு சோத்துப்பாறை பகுதியில் குடிசை அமைத்து வசிக்கின்றனர். குழந்தைகள் சோத்துப்பாறை பள்ளியில் படித்து வருகின்றனர். 2005 முதல் அரசு இலவச வீட்டு மனைகள் ஒதுக்கி தரக்கோரி வருவாய்த் துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். நடவடிக்கை இல்லாததால் நேற்று சோத்துப்பாறை அணை பகுதி வனத்துறை சோதனை சாவடி முன்பாக பழங்குடியினர் அரை மணி நேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அகமலை, கண்ணக்கரை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தென்கரை எஸ்.ஐ., கர்ணன் பேச்சு வார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.

