சூறாவளியால் வீட்டின் தகர மேற்கூரைகள் பறந்தது: மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
சூறாவளியால் வீட்டின் தகர மேற்கூரைகள் பறந்தது: மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
UPDATED : ஜூலை 06, 2026 06:24 PM
ADDED : ஜூலை 06, 2026 06:22 PM

போடி:போடி பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் வீடுகளின் மீது அமைக்கப்பட்டிருந்த தகர மேற்கூரைகள் காற்றில் பறந்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு ரோட்டில் விழுந்தது.
தென்மேற்கு பருவமழை பெய்யாமல் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொட்டகுடி ஆறு நீர்வரத்து இன்றி உள்ளது. மழை பெய்யாததால் பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
நேற்று போடி நகர், கிராம பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. மூணாறு செல்லும் ரோட்டில் உள்ள முந்தல் கிராமத்தில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளின் மேல் அமைக்கப்பட்டிருந்த தகர மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. ஆட்கள் வீட்டின் உள்ளே இருந்ததால் காயம் இன்றி தப்பினர்.
போடி சுப்புராஜ்நகர் மெயின் ரோட்டில் இருந்த வாதம் மரம் வேரோடு சாய்ந்து, மின் கம்பிகளை சேதப்படத்தி ரோட்டில் விழுந்தன. மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டது, போக்குவரத்து பாதித்தது. இயந்திரம் மூலம் மரங்களை அகற்றி பின் போக்குவரத்து சீரானது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேவாரம் மெயின் ரோட்டில் வளர்ந்து இருந்த புங்கன், கிருஷ்ணா நகரில் வேப்ப மரம் சூறாவளி காற்றால் சாய்ந்து ரோட்டில் விழுந்தன. முந்தல் ரோட்டில் தென்னை, முருங்கை, புளிய மரங்க உடைந்து விழுந்தன.
