இடைத்தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது திருநெல்வேலியில் வைகோ அறிவிப்பு
இடைத்தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது திருநெல்வேலியில் வைகோ அறிவிப்பு
ADDED : ஜூலை 03, 2026 06:43 AM
திருநெல்வேலி: தி.மு.க., -- அ.தி.மு.க., ரகசியமாக செயல்பட்டது மிகப்பெரிய அரசியல் மோசடி. த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளிப்போம். 7 தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலையை வேறு வடிவத்தில் கொண்டு வர முயற்சி நடக்கிறது. இதை எதிர்த்து துாத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டம் நடத்தப்படும். இதற்காக 2000 பக்க அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த காலத்தில் எங்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க., நிர்பந்தித்தது. அ.தி.மு.க., ஆட்சி அமைக்க தி.மு.க., வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது.
இதைவிட பெரிய அரசியல் மோசடி இருக்க முடியாது. கூட்டணியில் இருந்தபடியே எங்களுக்கு எதிராக செயல்பட்டனர்.
கட்சியில் இருந்து விலகியவர்கள் என் முதுகில் குத்தவில்லை; நேரடியாக நெஞ்சில் குத்திவிட்டார்கள். இருந்தாலும் அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க. சென்றவர்களை விமர்சிப்பது என் வழக்கமல்ல. விலகிய பலர் மீண்டும் என்னை சந்தித்துள்ளனர்.
த.வெ.க.,வை திராவிட இயக்கத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன். முதல்வர் விஜய் லஞ்சமில்லாத ஆட்சியை வழங்கி வருகிறார். கமிஷன் கலாசாரத்தை ஒழித்துள்ளார். மதச்சார்பின்மை, சமூக நீதி கொள்கைகளில் உறுதியாக இருப்பதால் அடுத்த 5 ஆண்டுகளும் அவரே முதல்வராக தொடர்வார். அரசுக்கு ஆதரவு அளிப்போம்.
தமிழகத்தில் நடக்கவுள்ள 7 தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது. எதிர்கால தேர்தல்களில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடவும் தயாராக உள்ளோம். ஆக. 4 ல் டில்லியில் எனது பார்லிமென்ட் உரைகள் அடங்கிய ஆங்கில நுால் வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார். செப். 15- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா நடைபெறும். இவ்வாறு கூறினார்.
