/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
698 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
/
698 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
ADDED : நவ 14, 2025 10:31 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில், இதுவரை 698 தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில், 450க்கும் மேற்பட்ட தெருக்களில், 80,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை, நாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன.
நாய் கடியால் பாதிக்கப்பட்டோர், நகராட்சிக்கு புகார் அளித்தனர். இதையடுத்து, திருவள்ளூர் நகராட்சி சுகாதார பிரிவினர், ஒரு வாரமாக, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை போன்ற பொது இடங்கள் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து வருகின்றனர்.
நகராட்சி கமிஷனர் தாமோதரன் கூறியதாவது:
திருவள்ளூர் நகராட்சி பகுதியில், 3,513 தெரு நாய் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. அந்த நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை பணி நடந்து வருகிறது. இதுவரை, 698 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு அறுவை சி கிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, நாய்கள் பிடிக்கும் பணியில், சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த, 70 பசு மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு, 1.53 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
கால்நடைகளை சாலையில் திரியவிட்டால், அவற்றை பிடித்து ஏலம் விடப்படும். மேலும், அவற்றின் உரிமையாளர் மீது, காவல் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

