காலாவதியான 8 டன் நுாடுல்ஸ் மண்ணில் புதைத்து அழிப்பு
காலாவதியான 8 டன் நுாடுல்ஸ் மண்ணில் புதைத்து அழிப்பு
ADDED : ஜூலை 09, 2026 03:11 AM

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே பறிமுதல் செய்யப்பட்ட, 8 டன் எடையுள்ள காலாவதியான நுாடுல்ஸ் பாக்கெட்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி அருகே சூரவாரிகண்டிகை கிராமத்தில், இம்மாதம் 4ம் தேதி இரவு, கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு அட்டை பெட்டிகள் மாற்றப்பட்டன.
தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், 8 டன் அளவிலான காலாவதியான நுாடுல்ஸ் பாக்கெட்டுகள் மாற்றப்பட்டதை கண்டறிந்தனர்.
விசாரணையில், கால்நடை தீவனத்திற்காக, காலாவதியான நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை, ஆந்திர மாநிலம் எடுத்து செல்ல திட்டமிட்டது தெரிய வந்தது.
வழக்கு பதிந்த சிப்காட் போலீசார் விசாரித்து வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை, உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்தனர்.
உணவு பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பறிமுதல் செய்யப்பட்ட, 8 டன் நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்கும் பணி, நேற்று நடந்தது.
மாதர்பாக்கம் அடுத்த தேர்வாய்கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, நுாடுல்ஸ் பாக்கெட்டுகள் புதைக்கப்பட்டன.
