/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரம் உயர்கிறது கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை...விமோசனம்!:முதற்கட்டமாக அவசர சிகிச்சை பிரிவு பணி துவக்கம்
/
தரம் உயர்கிறது கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை...விமோசனம்!:முதற்கட்டமாக அவசர சிகிச்சை பிரிவு பணி துவக்கம்
தரம் உயர்கிறது கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை...விமோசனம்!:முதற்கட்டமாக அவசர சிகிச்சை பிரிவு பணி துவக்கம்
தரம் உயர்கிறது கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை...விமோசனம்!:முதற்கட்டமாக அவசர சிகிச்சை பிரிவு பணி துவக்கம்
ADDED : பிப் 28, 2025 02:14 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவுடன் தரம் உயர்த்தப்பட உள்ளது. முதற்கட்டமாக பழைய செவிலியர் குடியிருப்புகளை இடித்து, 7,500 சதுர அடி பரப்பளவில் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கி உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, தேர்வாய்க்கண்டிகை அதை சுற்றியுள்ள கிராம பகுதிகள் என, 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தினரின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய, கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரையில், அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு, தினசரி, 900 - 1,100 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், பாம்பு கடி, மாரடைப்பு, தொழிற்சாலை மற்றும் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
உரிய நேரத்தில் உயிர் காக்கும் அவசர சிகிச்சை அளிக்க முடியாமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. நுாற்றுக்கணக்கான தொழிற்சாலை இருந்தும், விபத்து கால அவசர சிகிச்சை வழங்க முடியாத நிலையில், கும்மிடிப்பூண்டி இருந்து வருகிறது.
மேலும், மருத்துவமனை வளாகத்தில், 1972ம் ஆண்டு நிறுவப்பட்ட பாழடைந்த பழைய கட்டடத்தில், புறநோயாளி பிரிவு இயங்கி வருகிறது.
கும்மிடிப்பூண்டி மக்களின் மருத்துவ தேவையின் அவசியம் கருதி, அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில், புதிய கட்டடங்கள் நிறுவி, தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
முதற்கட்டமாக, பல்நோக்கு மருத்துவ புறநோயாளி பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். அதை தொடர்ந்து, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் என, மருத்துவமனை சார்பில், தெரிவிக்கப்பட்டது.
முதல்கட்ட பணிக்காக, தமிழக தேசிய சுகாதார இயக்கம் சார்பில், 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், பாழடைந்த நிலையில் இருந்த நான்கு செவிலியர் குடியிருப்புகளை இடித்து, இடிபாடுகளை அகற்றும் பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த இடத்தில், 7,500 சதுர அடி பரப்பளவில், பல்நோக்கு மருத்துவ பிரிவு கொண்ட புறநோயாளி பிரிவும், அதனுடன், 10 படுக்கை வசதி கொண்ட அவசர சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து, மருத்துவ அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், பயன்பாடின்றி பாழடைந்த நிலையில் மொத்தம், ஒன்பது குடியிருப்புகள் உள்ளன. முதல் கட்டமாக நான்கு குடியிருப்புகள் அகற்றப்பட்டன.
அந்த இடத்தில், 7,500 சதுர அடி பரப்பளவில் புறநோயாளி பிரிவுடன், அவசர சிகிச்சை பிரிவு நிறுவப்படும். அதை தொடர்ந்து, எஞ்சியுள்ள ஐந்து பாழடைந்த குடியிருப்புகளை அகற்றி, அந்த இடத்தில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப்பட இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

