குப்பை கழிவுகளால் குளம் பாழ்: ஊராட்சி நிர்வாகம் பாராமுகம்
குப்பை கழிவுகளால் குளம் பாழ்: ஊராட்சி நிர்வாகம் பாராமுகம்
ADDED : ஜூலை 06, 2026 03:37 AM

பள்ளிப்பட்டு: கல்யாண சுந்தரேசனார் கோவில் குளத்தை அத்திமாஞ்சேரிபேட்டை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், குப்பை கழிவுகள் தேங்கி பாழாகி வருகிறது.
பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரிபேட்டையில் உள்ள கல்யாண சுந்தரேசனார் கோவிலையொட்டி, பழமையான குளம் உள்ளது. இந்த கோவில் குளக்கரையையொட்டி வார சந்தை நடக்கிறது. சந்தை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள், காற்றில் பறந்து குளத்தில் குவிகின்றன.
இதனால், குளக்கரையும், படிக்கட்டுகளும் குப்பை கழிவுகளால் சீரழிந்து வருகின்றன. இந்த குப்பை கழிவுகளில் செடிகள் வளர்ந்து வருவதால், குளத்தின் துாய்மையும், அழகும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, குளத்தில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை உடனே அகற்றி, பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
