ADDED : டிச 09, 2025 06:45 AM

கும்மிடிப்பூண்டி:பொங்கல் பண்டிகை வரு இருப்பதை ஒட்டி, குயவர்கள், மண் பானைகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு தலைமுறைக்கு முன் வரை, தமிழக மக்களின் அன்றாட பயன்பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய பங்கு வகித்தன. நவநாகரிக காலத்திற்கு ஏற்ப, நாம் மாறியதன் விளைவாக, அவற்றை நாம் மறந்த போதிலும், பொங்கல் திருநாளில், மண் பானையில் பொங்கல் வைப்பதை, இன்றளவிலும் பலர் பின்பற்றி வருகின்றனர்.
அடுத்த மாதம், பொங்கல் பண்டிகை வர இருப்பதால், தொடர் மழைக்கு பின், கடந்த நான்கு நாட்களாக, பொங்கல் பானைகள் தயாரிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். களிமண் கிடைப்பதில் தாமதம், சுரங்க சட்டம், பல கட்ட அனுமதிகள் கடந்து மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே, திப்பன்பாளையம் கிராமத்தில், பொங்கல் பானைகள் மற்றும் சட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குயவர் ஒருவர் கூறுகையில், 'அடுத்த, 25 நாட்களுக்கு, பொங்கல் பானை, அடுப்பு மற்றும் சட்டி தயாரிப்பை முழு வீச்சில் மேற்கொள்வோம்' என தெரிவித்தார்.

