/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவருக்கு ரூ.36 லட்சம் இழப்பீடு
/
விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவருக்கு ரூ.36 லட்சம் இழப்பீடு
விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவருக்கு ரூ.36 லட்சம் இழப்பீடு
விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவருக்கு ரூ.36 லட்சம் இழப்பீடு
ADDED : மார் 17, 2024 11:00 PM
சென்னை: டிப்பர் லாரி மோதியதில் மாற்றுத்திறனாளியான மருத்துவ கல்லுாரி மாணவருக்கு, 36.66 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத், 22. மருத்துவ கல்லுாரி மாணவரான இவர், கடந்த 2019 மார்ச் 26ம் தேதி, கோவை அவினாசி சாலையில், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி, தன் நண்பருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது, அதே சாலையில் வந்த சரக்கு வாகனம், ஹரிபிரசாத் சென்ற பைக் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஹரிபிரசாத்தின் இடது கால் மீது, அதே வழித்தடத்தில் வந்த டிப்பர் லாரி ஏறியது.
படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
விபத்தில் ஏற்பட்ட படுகாயத்திற்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், ஹரிபிரசாத் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி தங்கமணி கணேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி,'அதிவேகம், அஜாக்கிரதையாக டிப்பர் லாரியை டிரைவர் இயக்கியதே, விபத்திற்கு காரணம். விபத்தில் மனுதாரருக்கு, 60 சதவீதம் அளவுக்கு உடல் செயல்பாட்டு இயலாமை ஏற்பட்டுள்ளது.
எனவே, அவருக்கு இழப்பீடாக, 36.66 லட்சம் ரூபாயை, ஆண்டிற்கு 7.5 சதவீத வட்டியுடன், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

