/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் 'கப்'அடிக்குது!: நாறி நாற்றமெடுக்கும் கும்மிடி குடியிருப்புகள்
/
கழிவுநீர் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் 'கப்'அடிக்குது!: நாறி நாற்றமெடுக்கும் கும்மிடி குடியிருப்புகள்
கழிவுநீர் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் 'கப்'அடிக்குது!: நாறி நாற்றமெடுக்கும் கும்மிடி குடியிருப்புகள்
கழிவுநீர் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் 'கப்'அடிக்குது!: நாறி நாற்றமெடுக்கும் கும்மிடி குடியிருப்புகள்
ADDED : டிச 07, 2025 06:40 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி, இரு வாரங்களாக கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் அகற்ற வழியின்றி, செப்டிக் டேங்க் நிரம்பி தெருக்களில் வழிந்தோடுவதால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமான, 48 ஏக்கர் பரப்பளவு தாமரை ஏரி, நீர்வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர், நேராக தாமரை ஏரியில் கலந்து, ஏரி நீர் மாசு அடைந்து நகரின் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பித்தளை பாத்திரங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் கருமை நிறமாக மாறியதுடன் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, அரசின் கவனத்தை ஈர்த்தது.
ஒப்படைப்பு
மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சிப்காட் நிர்வாகம் சார்பில் தொழிற்சாலைகளுக்கு கெடுபிடி விதிக்கப்பட்டது. தற்போது தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் கால்வாயில், கழிவுநீரை திறந்துவிட்ட டேங்கர் லாரி ஒன்றை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தது.
இதையடுத்து உடனடியாக கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தும் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
அதுவரை, கும்மிடிப்பூண்டி பகுதிக்குள் கழிவுநீர் வெளியேற்ற வேண்டிய இடத்தை காண்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இரு வாரங்களாக கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர் கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டு வருகி ன்றனர் . சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்க்காடு பகுதியில் உள்ள இணைப்புச் சாலையில், 20க்கும் மேற்பட்ட கழிவுநீர் டேங்கர் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
போராட்டம்
தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்பதை உறுதி செய்யும் விதமாக, அனைத்து வாகனங்களின் டயர்களில் இருந்தும் காற்றை இறக்கி விட்டு நுாதன போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலம் என்பதால், வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் நிரம்பி, தெருக்களில் வழிந்தோடுகிறது. பலர், வீடுகளின் கழிவுநீரை சாலையோரம் குழி எடுத்து தேக்கி வருவதும், வீடுகளை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாய்களில் திறந்தும் விடுகின்றனர்.
இதனால், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பெத்திக்குப்பம், புதுகும்மிடிப்பூண்டி, தேர்வழி, எளாவூர், ஓபுளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில், கடந்த இரு வாரமாக கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது. அப்பகுதிகளில் சுகாதாரம் பாதித்து, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:
அரசு விதிமுறைப்படி கழிவுநீரை சேகரிக்கும் டேங்கர் லாரிகள், 50 கி.மீ., தொலைவில், திருமழிசை பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீரை கொண்டு செல்ல வேண்டும்.
பணவிரயம்
அங்கு ஒரு நாள் காத்திருந்து, கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும். இதனால் ஏற்படும் நேரம் மற்றும் பணம் விரயத்தை கணக்கிட்டால், ஒரு முறை எடுத்து செல்ல, 12,000 வரை ரூபாய் செலவாகிறது. ஆனால், மக்களோ, 1,500 முதல் 2,000 ரூபாய் வரை மட்டுமே தருகின்றனர்.
இதனால், கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்க வேண்டும் என, ஐந்து ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசு அலட்சியப்படுத்துகிறதே தவிர இதுவரை பேச்சுக்கு அழைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

