/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உரிமையாளர் வீட்டில் 11 சவரன் திருடிய இரு பெண்கள் கைது
/
உரிமையாளர் வீட்டில் 11 சவரன் திருடிய இரு பெண்கள் கைது
உரிமையாளர் வீட்டில் 11 சவரன் திருடிய இரு பெண்கள் கைது
உரிமையாளர் வீட்டில் 11 சவரன் திருடிய இரு பெண்கள் கைது
ADDED : நவ 14, 2025 02:48 AM

திருவள்ளூர்: உரிமையாளர் வீட்டில் 11 சவரன் நகை திருடிய இரு பெண்களை கைது செய்த போலீசார், 8.50 சவரனை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரி, 52. சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்து விட்டார். இரு மாதங்களுக்கு முன், திருவாலங்காடைச் சேர்ந்த சரிதா, 42, ஜமுனா, 35, ஆகிய இருவரும், மகேஷ்வரி வீட்டில் உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், சரிதா மற்றும் ஜமுனா இருவரும், மகேஷ்வரியிடம் அடிக்கடி வந்து பேசிவிட்டு சென்று வந்தனர். கடந்த 1-ம் தேதி, 'நகைகள் ஏதும் போடாமல் ஏன் இப்படி இருக்கிறீர்கள்' என, மகேஷ்வரியிடம் இருவரும் கேட்டுள்ளனர்.
அதற்கு மகேஷ்வரி, 'அடகு வைத்த நகையை தற்போது தான் மீட்டு வந்துள்ளேன்' என தெரிவித்தார். பின், 11 சவரன் நகையை காண்பித்துவிட்டு, வீட்டில் வைத்துள்ளார். கடந்த 7-ம் தேதி காலை, நகையை தேடிய போது, மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வாடகை வீட்டில் தங்கியிருந்த இருவரும் மாயமாகினர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம், திருவாலங்காடில் பதுங்கியிருந்த சரிதா மற்றும் ஜமுனா ஆகிய இருவரையும் கைது செய்த மணவாளநகர் போலீசார், 8.50 சவரன் நகைகளை மீட்டனர். பின், இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

