மாவட்டத்தில் 2.70 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி: பொன்னேரியில் தொடக்கம்
மாவட்டத்தில் 2.70 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி: பொன்னேரியில் தொடக்கம்
UPDATED : ஜூலை 01, 2026 04:52 PM
ADDED : ஜூலை 01, 2026 04:50 PM
பொன்னேரி:மாவட்டம் முழுதும், 2.70 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை, கலெக்டர் கவிதா பொன்னேரியில் தொடங்கி வைத்தார்.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம், ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, கிராமங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த ஆண்டிற்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள், நேற்று தொடங்கின. பொன்னேரி அடுத்த ஆவூர் கிராமத்தில் நடந்த முகாமில், கலெக்டர் கவிதா இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கலெக்டர் கவிதா கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், 2.70 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நோயால் மாடுகள், கன்றுகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி மிகவும் அவசியம்.
கிராமப்புறங்களுக்கான நடமாடும் கால்நடை மருத்துவமனைகள், சரியான திட்டமிடலுடன், தேவையான இடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
கால்நடைகள் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு, முக்கியத்துவம் தரப்படுகிறது. கிராமங்களுக்கான நடமாடும் கால்நடை மருத்துவமனை திட்டம், நீண்டகாலமாக செயல்படவில்லை என்பது தெரிய வந்தால், அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
