/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவில் அரசின் நிவாரண பணத்தில் சீரமைப்பு பணி
/
வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவில் அரசின் நிவாரண பணத்தில் சீரமைப்பு பணி
வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவில் அரசின் நிவாரண பணத்தில் சீரமைப்பு பணி
வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவில் அரசின் நிவாரண பணத்தில் சீரமைப்பு பணி
ADDED : மார் 17, 2024 11:11 PM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இது கிராம மக்கள் பராமரிப்பில் உள்ள கோவிலாகும்.
பழமையான இக்கோவில் சிதிலம் அடைந்ததை தொடர்ந்து, கடந்த, 2016ல், கிராமவாசிகள் தங்களது சொந்த செலவில் கோவிலை புனரமைகக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
கடந்த, எட்டு ஆண்டுகளாக கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிழக்கு நோக்கி சிவபெருமானுக்கும், இடதுபுறத்தில் அம்பாளுக்கும் என தனித்தனி சன்னிதி அமைக்கப்பட்டு உள்ளது.
கோவிலின் உள்பிரகாரம் முழுதும் அழகிய வேலைப்பாடுகளுடன் துாண்கள், கூரை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சண்டிகேஸ்வரர், நம்மாழ்வார்கள், சூரியன், சந்திரன் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வெளிப்பிரகாரத்தின் முகப்பில் சிவபெருமானுக்கு இடதுபுறம் விநாயகர், வலதுபுறம் வள்ளி தெய்வனையுடன் முருகர், காலபைரவர், நவக்கிரகம், பிரதோஷ நந்தி ஆகியன தனித்தனி சன்னிதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.
கோவில் திருப்பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளதால் வரும் ஜூலை மாதம், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சன்னிதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக, விநாயகர், முருகர், அம்பாள் சிலைகள், பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு தயார் வைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
மிகவும் பழமையான இக்கோவிலை கிராம மக்களின் சொந்த செலவில் புனரமைத்து வருகிறோம். வைத்தியநாத சுவாமி பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி, அதன் வாயிலாக திருப்பணி நடைபெறுகிறது. எங்கள் கிராமத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசின் நிவாரண தொகை முழுதும் கோவில் திருப்பணிகளுக்கே பயன்படுத்தி உள்ளோம்.
தற்போது நிதி பற்றாக்குறையால் சுற்றுசுவர், வர்ணம் பூசுதல், வெளிப்பிரகாரம் தரை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் தொய்வு உள்ளது. ஜூலை மாதம், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்குள் அனைத்து திருப்பணிகளையும் முடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

