/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களைகட்டிய திருவிழா; கோவில்களில் குவிந்த பக்தர்கள்
/
களைகட்டிய திருவிழா; கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED : பிப் 27, 2025 11:23 PM

பல்லடம்; நேற்றுமுன்தினம் மாலை துவங்கி விடிய விடிய, சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
பல்லடம் அருளானந்த ஈஸ்வரர், காசி விஸ்வநாதர், சித்தம்பலம் நவகிரக கோட்டை, சுக்கம்பாளையம் வாரக்க நாடு, கே.என்.புரம் சந்திரமவுலீஸ்வரர், அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி மற்றும் மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும், சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு யாகங்கள், அபிஷேக அலங்கார பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் என, சிவராத்திரி விழா இரவு முழுவதும் கொண்டாடப்பட்டது.
நான்கு கால யாக பூஜைகளை தொடர்ந்து, அதிகாலை, 5:00 பணிக்கு அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிவராத்திரியை தொடர்ந்து, நேற்று, அமாவாசை வழிபாடு நடந்தது. சித்தம்பலம் நவகிரக கோட்டையில், மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாட்டை தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட 108 தீர்த்தங்களால் நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரம் அதர்வன பத்ரகாளி பீடத்திலும் அமாவாசை வழிபாடு நடந்தது.
நிகும்பலா யாகத்தை தொடர்ந்து, தங்க கவச அலங்காரத்தில் பிரத்தியங்கிராதேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பல்லடம் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா, சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா மற்றும் அமாவாசை வழிபாடு என, கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

