பிரதான குழாயில் மாயமாகும் குடிநீர்! கடைக்கோடி கிராமங்களில் கண்ணீர்
பிரதான குழாயில் மாயமாகும் குடிநீர்! கடைக்கோடி கிராமங்களில் கண்ணீர்
ADDED : ஜூலை 06, 2026 06:22 PM

உடுமலை: திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பல்வேறு காரணங்களால் கடைக்கோடி கிராமங்களுக்கு வினியோகம் சீராகாமல், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளைச்சேர்ந்த, 123 ஊரக குடியிருப்புகள் மற்றும் உடுமலை ஒன்றியம், 3 ஊராட்சிகளைச்சேர்ந்த, 35 ஊரக குடியிருப்புகளுக்காக திருமூர்த்தி அணையிலிருந்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டம், 2017ல், செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
நீண்ட காலமாக குடிநீருக்காக போராடி வந்த, குடிமங்கலம் ஒன்றிய மக்கள், புதிய திட்டத்தால், திருமூர்த்தி தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, பல ஆண்டுகளாகியும் கடைக்கோடி கிராமங்களில், சீரான வினியோகம் கானல் நீராகவே உள்ளது.
புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில், புவீயிர்ப்பு விசை அடிப்படையில், 103 ஊரக குடியிருப்புகளும், உந்து விசை அடிப்படையில், 55 குடியிருப்புகளுக்கும் குடிநீர் வினியோகிக்க திட்டம் வடிவமைக்கப்பட்டது.
இதில், பிரதான குழாயிலிருந்து நீர் உந்து நிலையங்களுக்கு புவீயிர்ப்பு விசை அடிப்படையில், தண்ணீர் செல்கிறது. அங்கு கொள்ளளவு குறைபாடு உட்பட பிரச்னைகளால், தண்ணீர் செல்ல வழியில்லாமல், அழுத்தம் அதிகரித்து பிரதான குழாய் உடைவது தொடர்கதையாக இருந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
திட்டத்தின் கடைக்கோடி கிராமங்களான அடிவள்ளி, வீதம்பட்டி, வாகத்தொழுவு, பெரியபட்டி, விருகல்பட்டி உட்பட பகுதிகளில், அடிக்கடி வினியோகம் பாதிக்கிறது.
இலுப்பநகரம் நீர் உந்து நிலையத்திலிருந்து, சிந்திலுப்பு, மூங்கில்தொழுவு வழியாக, வீதம்பட்டி உட்பட பகுதிகளுக்கு, பிரதான குழாய் செல்கிறது.
நீர் உந்து நிலையத்துக்கும், கடைக்கோடி கிராமத்துக்கும் இடைப்பட்ட பகுதியில், பிரதான குழாயில், குடிநீர் ‘மாயமாகி’ விடுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பிரச்னை நீண்ட காலமாக உள்ளது.
போதிய மழை இல்லாமல், வறட்சி துவங்கியுள்ள நிலையில், குடிநீர் வினியோக பிரச்னைகளுக்கு, குடிநீர் வடிகால் வாரியம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
