உளுந்து சாகுபடிக்கு மானியம் வரும் சீசனுக்கு எதிர்பார்ப்பு
உளுந்து சாகுபடிக்கு மானியம் வரும் சீசனுக்கு எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 08, 2026 04:51 PM
உடுமலை: ஆடிப்பட்டத்தில் உளுந்து சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், விதைப்பண்ணைகள் அமைக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், முன்பு உளுந்து, துவரை, தட்டை, மொச்சை, கொள்ளு உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் சாகுபடி பரப்பு அதிகளவு இருந்தது.
பருவம் தவறிய மழை, சாகுபடியில் நோய்த்தாக்குதலால் விளைச்சல் குறைவு, பயறு வகை பயிர்களுக்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால், இத்தகைய சாகுபடிகளை விவசாயிகள் கைவிட துவங்கினர்.
சில ஆண்டுகளுக்கு முன், வேளாண்துறை சார்பில் விதைப்பண்ணை, செயல்விளக்க திடல்கள் அமைக்க மானியம் ஒதுக்கப்பட்டது.
சாகுபடி தொழில்நுட்பங்களுக்கு வழிகாட்டுதலும் வழங்கி, அறுவடை சீசனில் ஆதார விலை திட்டத்தின் கீழ் உளுந்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது.
இதனால், சில ஆண்டுகள் உளுந்து சாகுபடி பரப்பு உடுமலையில் அதிகரித்தது. நடப்பு சீசனில் குறைந்த பரப்பிலேயே உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வரும் ஆடிப்பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய தேவையான, மானிய திட்டங்களை வேளாண்துறை செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
