ADDED : ஏப் 27, 2024 12:42 AM
'டாலர் சிட்டி' என்று உலக நாடுகள் கொண்டாடும் அளவுக்கு, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூர் சிறந்து விளங்குகிறது. மத்திய, மாநில அரசுகளின் நேரடி உதவியில்லாமல், தன்னிச்சையாக வளர்ச்சி பெற்ற பின்னலாடை தொழிலை பாதுகாக்க, அரசுகளின் ஆதரவு திட்டங்களும் கைகொடுத்தது.
இயந்திர இறக்குமதி சிக்கல்
ஆயத்த ஆடை உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்திய தொழில்துறையினர், தேவையான இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்தனர். மத்திய அரசும், இயந்திர உற்பத்தியை ஊக்குவிக்கவில்லை. 'டப்' திட்டம் மூலம், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான மானியத்தை மட்டும் வழங்கியது. இது, இயந்திர இறக்குமதியை மென்மேலும் அதிகரிக்க செய்தது.
புதிய சிந்தனையால்புத்தாக்கம்
தொழிலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தி செல்ல என்ன செய்யலாம் என்று யோசனை செய்த போதுதான், திருப்பூர் தொழில்துறையினரிடம் புதிய சிந்தனை பிறந்துள்ளது. தேவையான இயந்திரத்தையும், உதிரி பாகங்களையும் நாமே தயாரிக்கலாமே என்ற எண்ணம் பிரதிபலித்துள்ளது.
'சர்வீஸ்' சென்டர்கள்
இறக்குமதி இயந்திரங்களை பயன்படுத்தும் போது, திடீரென மக்கர் செய்தாலும், அவற்றை சரிசெய்ய போதிய சர்வீஸ் சென்டர் இல்லை. பிரபல மெஷின் தயாரிப்பு நிறுவனம், அந்த சேவையை வழங்கினாலும், அதற்காக அதிக அளவு மெனக்கெட வேண்டியுள்ளது. கோவையிலேயே, உதிரி பாகம் தயாரிக்கப்பட்டால், திருப்பூர் பின்னலாடை தொழில்துறை சந்திக்கும் பிரச்னையில், 50 சதவீதம் குறைந்துவிடும்.
உதிரி பாகம் தயாரிப்பு என்பது, தொழில்நுட்ப கல்வி வாயிலாகவும், புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாகவும், நவீன இயந்திர வடிவமைப்புக்காவும் வளர்ச்சி பெறும், திருப்பூரின் தேவைகளை தற்சார்பு முறையில் பூர்த்தி செய்யும் என்பதில் மாற்றமில்லை.

