/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடு ரோட்டில் பாயும் சாக்கடை கழிவு
/
நடு ரோட்டில் பாயும் சாக்கடை கழிவு
ADDED : ஜூலை 25, 2024 11:23 PM

திருப்பூர் : திருப்பூர் - பல்லடம் ரோடு நகரின் முக்கியமான ரோட்டில் ஒன்றாக உள்ளது. தினமும் பல்லாயிரம் வாகனங்கள் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.
இது, அதிகளவு வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த ரோட்டில் நொச்சிப்பாளையம் பிரிவு மூன்று ரோடுகள் சந்திக்கும் இடமாக, பரபரப்பான பகுதியாக உள்ளது. இப்பகுதியில் 3 வது குடிநீர் திட்ட மேல்நிலைத் தொட்டியும் அமைந்துள்ளது.
நான்கு புறமும் இருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன. அதேபோல் வீரபாண்டி பிரிவு பகுதி முக்கியமான நான்கு ரோடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இப்பகுதிகளில், ரோட்டோரம் அமைந்துள்ள வடிகால்களில் பெருமளவு மண்ணும், மக்காத கழிவுகளும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், வடிகாலில் செல்லவேண்டிய கழிவு நீர், தடைப்பட்டு, ரோட்டில் சென்று பாய்கிறது.
சில நேரங்களில் இது ரோட்டின் மையப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பாதசாரிகள் பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது. வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் வாரியிறைக்கப்பட்டு அவதி ஏற்படுகிறது. எனவே, வடிகால் உரிய முறையில் துார்வாரி சுத்தம் செய்து, கழிவு நீர் தேங்காமல் கடந்து செல்லும் வகையில, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

