/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலையில் தேர்த்திருவிழா; வானில் வர்ண ஜாலம்
/
உடுமலையில் தேர்த்திருவிழா; வானில் வர்ண ஜாலம்
ADDED : ஏப் 28, 2024 02:02 AM

உடுமலை;உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, அம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. 1,200க்கும் மேற்பட்ட பட்டாசு ரகங்களை வெடித்து, வானில் வர்ண ஜாலம் காட்டிய வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 9ம் தேதி துவங்கியது. நோன்பு சாட்டுதல், திருக்கம்பம் நடுதல், பூவோடு, மாவிளக்கு, சுவாமி திருக்கல்யாணம் உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த, 25ம் தேதி, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. நேற்று முன்தினம், இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, குட்டை திடலில், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
வானில், பல வண்ணங்களில், நட்சத்திரம், பூக்கள், ஒரே சமயத்தில் பல வண்ண பூக்கள் உதிரும் காட்சி என, பல்வேறு வடிவங்களில், பட்டாசுகளை வெடித்து, வானில் வர்ண ஜாலம் காட்டும் நிகழ்ச்சி நடந்தது. 45க்கும் மேற்பட்ட வகையில், வானில் உயரத்தில் சென்று வர்ண ஜாலம் காட்டிய, 1,200க்கும் மேற்பட்ட பட்டாசு ரகங்கள் வெடிக்கப்பட்டன. மேலும், நில மட்டத்தில் சரம் உட்பட பல்வேறு ஒலி எழுப்பிய பட்டாசுகளும் வெடிக்கப்பட்டது. வானில் வர்ண ஜாலம் காட்டிய வாண வேடிக்கை நிகழ்ச்சியில், பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
நேற்று காலை, திருவிழா கொடியிறக்கம் நிகழ்ச்சியும், காலை, 11:00 மணிக்கு, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, கரும்பு சாறு என பல்வேறு திரவியங்களில் அம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழாவும், மாலையில், அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலாவுடன், தேர்த்திருவிழா நிறைவடைந்தது.

