ADDED : ஜூலை 05, 2026 07:51 PM

உடுமலை: உடுமலை பகுதியில், வானிலை மாறி, பரவலாக சாரல் மழை பெய்து வருவதுடன், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு, உடுமலை பகுதியில் கோடை கால மழை பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழையும் குறித்த நேரத்தில் துவங்காததால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து விவசாயிகள் கவலையில் இருந்தனர்.
பி.ஏ.பி., பாசன திட்ட அணைகள் மற்றும் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலையிலும் மழை இல்லாமல், வரும் ஆடிப்பட்டத்துக்கு தண்ணீர் திறப்பு கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில், விவசாயிகளுக்கு நிம்மதியளிக்கும் வகையில், கடந்த இரு நாட்களாக சீதோஷ்ண நிலை மாறி, பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ளது. அவ்வகையில், அப்பர்நீராறு 36 மி.மீ., வால்பாறை 21; லோயர் நீராறு 16; பெருவாரிப்பள்ளம் 4; சோலையாறு அணை 29; பரம்பிக்குளம் 7 மி.மீ., என நேற்று காலை மழையளவு பதிவாகியிருந்தது.
மலைத்தொடரில் பெய்த மழையால், வறண்டு இருந்த பஞ்சலிங்க அருவியில் நேற்று நீர் வரத்து இருந்தது. அமராவதி அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 1,279 கனஅடியாக உயர்ந்துள்ளது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்தால், வரும் ஆடிப்பட்டத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு வறட்சியான காற்று விடைபெற்று, பகலிலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
