ADDED : பிப் 27, 2025 11:15 PM

திருப்பூர்; திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நுாலகம், தகவல் அறிவியல் துறை மற்றும் 'டாப் லைட்' நுாலகம் ஆகியன இணைந்து, கல்லுாரி வாசகர் வட்டத்தின், 10வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மலர் வெளியீட்டு விழாவை நடத்தின.
கல்லுாரி நுாலகர் டாக்டர் சித்ரா தவப்புதல்வி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பாலசுப்ரமணியன், இயற்பியல் துறை தலைவர் அரவிந்தன், கவிஞர் சிவதாசன் ஆகியோர் பேசினர். வாசகர் வட்ட முன்னாள், இந்நாள் மாணவர்கள் பங்கேற்று, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞர் சுடர்விழி பேசுகையில், ''இன்றைய தலைமுறை பெண்கள், பெரும்பாலும் சுதந்திரம் என்பதை உடையிலும், பயணங்களிலும் தான் உள்ளது என நினைக்கின்றனர்.
அதையெல்லாம் தாண்டி, அவர்களது இலக்கில் வெற்றி பெறுவதிலும், பெற்றோரின் ஆசை, கனவுகளை நனவாக்குவதிலும் தான், உண்மையான சுதந்திரம் இருக்கிறது என்பதை மாணவிகள் உணர வேண்டும்'' என்றார்.
கவிஞர் கவியுலவன் பேசுகையில்,''தமிழ் சமூகம் தொடர்பான நிறைய வரலாறுகளை, மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நுாலகம் தொடர்பான விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இளைய தலைமுறையினர், இணையதள வசதி களுக்கு அடிமையாகிவிடக் கூடாது'' என்றார்.
நிகழ்ச்சியில், 10 ஆண்டு வாசகர் வட்ட முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முடிவில், முனைவர் பட்ட ஆய்வாளர் விஜயராஜ், நன்றி கூறினார்.

