ADDED : மார் 18, 2024 12:28 AM
நல்ல வேளையாக, 'கத்திரி வெயில்' துவங் குவதற்கு முன்பே தேர்தல் முடிந்துவிடுவதால், அரசியல் கட்சியினர் ஆறுதல் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலாகட்டும்; லோக்சபா தேர்தலாகட்டும்; பல நேரங்களில், சரியாக கத்திரி வெயில் காய்ச்சி எடுத்துவிடும்.
இந்தாண்டு கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4ல் துவங்கி, 28 வரை நீடிக்கிறது. இந்த முறை லோக்சபா தேர்தலில், கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பும் வகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று துவங்கி, தேர்தல் பிரசாரத்துக்கு, 30 நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது. வேட்புமனு தாக்கல் துவங்கி, இறுதி வேட்பாளர் பட்டியல் வந்த பிறகே, பிரசாரம் வேகமெடுக்கும். அதன் பிறகே, தொகுதிகளுக்குள் சுற்றிவர வேண்டியிருக்கும்.
வரும் 31ம் தேதி துவங்கி, ஏப்., 17 வரை லோக்சபா தேர்தல் பிரசாரம் களைகட்டப்போகிறது. இந்த, 18 நாட்கள் மட்டும் கடும் வெயிலை சமாளித்தால் போதும்.
கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வெயிலில் முகம் கறுத்து, பல மாதங்கள் அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதும் உண்டு. தொகுதியை குறைந்தது மூன்று முறையாவது சுற்றிவர வேண்டும்.
இந்த முறை கத்திரி வெயில் துவங்கும் முன்னதாகவே, தேர்தல் முடிந்துவிடும் என்பதால் 'குளுகுளு' வாகனங்களை பயன்படுத்தி, தேர்தல் பணியை முடித்துவிடலாம், என்று கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

