/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை வியாபாரிகளுக்கு ஒப்புகைச்சீட்டு! மாநகராட்சி சந்தையில் அமல்
/
கால்நடை வியாபாரிகளுக்கு ஒப்புகைச்சீட்டு! மாநகராட்சி சந்தையில் அமல்
கால்நடை வியாபாரிகளுக்கு ஒப்புகைச்சீட்டு! மாநகராட்சி சந்தையில் அமல்
கால்நடை வியாபாரிகளுக்கு ஒப்புகைச்சீட்டு! மாநகராட்சி சந்தையில் அமல்
ADDED : மார் 20, 2024 12:13 AM

திருப்பூர்;தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், கால்நடை வர்த்தகத்தில் ஈடுபடுவோர், பணம் கொண்டு செல்வதில் உள்ள சிரமம் தவிர்க்க, மாநகராட்சி கால்நடை சந்தை நிர்வாகத்தினர் ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், கோவில்வழியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், பிரதி திங்கள் தோறும் கால்நடை சந்தை நடக்கிறது. இங்கு, ஆயிரம் கால்நடைகள் வர்த்தக்கத்துக்கு கொண்டு வரப்படும்; ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும்.
ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும், கால்நடை சந்தை நடத்தப்படுகிறது. அங்கு, 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும்.சந்தையில் பங்கேற்கும் வாங்குவோர், விற்போர், லட்சக்கணக்கான ரூபாய் பணி பரிவர்த்தனையை, வாய்க்கணக்கு வாயிலாகவே பேசி முடிக்கின்றனர்; ரொக்கமாகவே பணத்தை வாங்கிச் செல்கின்றனர்.
'ஜிபே' போன்ற 'ஆன் லைன்' பண பரிவர்த்தனை, வியாபாரிகளுக்கு பழக்கப்படாத விஷயமாகவே உள்ளது.இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், கையில் ரொக்கத்துடன் செல்லும் வியாபாரிகள், 'செக்போஸ்ட்'களில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினருக்கு விளக்கம் அளித்த படியே, பணத்தை எடுத்து செல்ல வேண்டியுள்ளது; இது, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய நிலையில், வழக்கமாக, சந்தை நிர்வாகத்தினர், பணம் பரிவர்த்தனை தொடர்பாக ஒப்புகைச்சீட்டு வழங்குவர்; நேற்று முன்தினம் வரை, இது வழங்கப்படாத நிலையில், 'விரைவில் வழங்க வேண்டும்' என, கால்நடை சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்பார்த்தனர்; இதுதொடர்பான செய்தி, நேற்று 'தினமலர்' நாளிதழில் வெளியானது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி வார கால்நடை சந்தை நிர்வாகம் சார்பில் மாநகராட்சி கமிஷனரின் உத்தரவு அடிப்படையில், வாரச்சந்தையில் கால்நடை விற்பனை செய்த தொகையை எடுத்துச் செல்ல ஒப்புகைச் சீட்டு அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதே போன்று, பிற இடங்களில் உள்ள சந்தைகளிலும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என, கால்நடை விற்போர், வாங்குவோர் எதிர்பார்க்கின்றனர்.

