/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பி.எல்.ஐ. திட்ட திருத்தத்தால் சிறு, குறு நிறுவனங்கள் பலன் பெறும்'
/
'பி.எல்.ஐ. திட்ட திருத்தத்தால் சிறு, குறு நிறுவனங்கள் பலன் பெறும்'
'பி.எல்.ஐ. திட்ட திருத்தத்தால் சிறு, குறு நிறுவனங்கள் பலன் பெறும்'
'பி.எல்.ஐ. திட்ட திருத்தத்தால் சிறு, குறு நிறுவனங்கள் பலன் பெறும்'
ADDED : நவ 15, 2025 01:12 AM
திருப்பூர்: உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் எச்.எஸ். குறியீடு குறித்த விழிப்புணர்வு கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது.
பெஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் சேஷாத்ரி சத்தியமூர்த்தி பேசுகையில், ''தங்களது நிறுவனம் பி.எல்.ஐ., திட்டத்தின் பயனாளராக இருந்து, அதன் வாயிலாக தொழில் விரிவாக்கத்துக்கும், உற்பத்தி திறன் மேம்பாட்டுக்கும் பெரிய ஆதரவாக இருந்தது. அரசு வழங்கிய ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல்கள் ஊக்கமளித்தது,'' என்றார்.
ஜவுளி அமைச்சகத்தின் உதவி செயலர் பாஸ்கர் கல்ரா, இணையவழியில் பங்கேற்று பேசியதாவது:
மத்திய அரசு, பி.எல்.ஐ. திட்டத்தில் பல திருத்தங்களை செய்துள்ளது. இதன் வாயிலாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் பலன் பெற முடியும். முதலீட்டு வரம்பு, பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
தனி நிறுவனம் துவங்க வேண்டிய நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது; அதே நிறுவனத்தின் கீழ், தனி திட்ட அலகு தொடங்கினால் போதுமானது. ஆண்டு தோராய வருமான வளர்ச்சி நிபந்தனை, 25 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பி.எல்.ஐ. திட்டத்திற்கான விண்ணப்ப தளம், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது; டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம். திட்டத்தில், மனிதனால் உருவாக்கப்பட்ட நார் ஆடைத்துறை, எம்.எம்.எப்., துணி உற்பத்தி துறை மற்றும் தொழில்நுட்ப துணி துறை ஆகிய நிறுவனங்கள் தகுதி பெறுகின்றன. போர்டலில் பதிவு செய்த பின், திட்ட மேலாண்மை நிறுவனம் விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வழிகாட்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, சங்கத்தின் லாஜிஸ்டிக்ஸ் துணைக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலர் ஆனந்த், ஐ.எப்.சி.ஐ. நிறுவன திட்ட கண்காணிப்பு நிறுவனத்தின் அல்கா சோமானி பேசினர்.
திருப்பூர் ஜவுளி குழு துணை இயக்குனர் கவுரிசங்கர், உதவி இயக்குனர் நித்யகுமார், தர உறுதி அலுவலர் கேசவ் மூர்த்தி ஆகியோர், எச்.எஸ்., குறியீடுகள் மற்றும் பின்னலாடைகள் மற்றும் துணிகளின் சர்வதேச வகைப்பாடு குறித்து பேசினார்.

