/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தலுக்கு பின் மின் கட்டணம் குறைப்பு :தொழில்துறையினரிடம் முதல்வர் உறுதி
/
தேர்தலுக்கு பின் மின் கட்டணம் குறைப்பு :தொழில்துறையினரிடம் முதல்வர் உறுதி
தேர்தலுக்கு பின் மின் கட்டணம் குறைப்பு :தொழில்துறையினரிடம் முதல்வர் உறுதி
தேர்தலுக்கு பின் மின் கட்டணம் குறைப்பு :தொழில்துறையினரிடம் முதல்வர் உறுதி
ADDED : மார் 20, 2024 12:04 AM
திருப்பூர்;'தேர்தலுக்கு பின், மின் கட்டண உயர்வை குறைக்கும் கோரிக்கை பரிசீலிக்கப்படும்,' என, முதல்வர் உறுதி அளித்துள்ளதாக, மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் இந்த பாதிப்பு இருந்ததால், தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி, தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
எட்டு கட்டமாக போராடியும், முதல்வர் போராட்டக்குழுவை அழைத்து பேசவில்லை. இதனால், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, எதிர்ப்பை பதிவு செய்ய, தொழில்துறையினர் திட்டமிட்டனர். பொள்ளாச்சி அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினை சந்திக்க, தொழில்துறையினர் நேரம் கேட்டனர்.
சென்னையில் வந்து சந்திக்குமாறு முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று காலை, முதல்வரை தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் சந்தித்தனர்.
திருப்பூரில் இருந்து, ஒருங்கிணைப்பாளர்கள் முத்துரத்தினம், ஸ்ரீகாந்த், கோவிந்தராஜ், சதாசிவம், லட்சுமணன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து, தொழில் பாதிப்புகளையும், மின் கட்டண குறைப்பு தொடர்பான கோரிக்கையையும் முன்வைத்தனர்.
தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துரத்தினம் கூறுகையில், 'மின்கட்டண உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வரிடம் விளக்கினோம்.
தேர்தலுக்கு பின், மீண்டும் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
எட்டு கட்ட போராட்டத்துக்கு பின், முதல்வரை சந்தித்து எங்களது பாதிப்பை தெரிவித்துள்ளோம்; நிச்சயம் நடவடிக்கைஎடுப்பார் என்று நம்புகிறோம்,'' என்றார்.

