பீட்ரூட் விளைச்சல் பாதிப்பு: விலை அதிகரிக்க வாய்ப்பு
பீட்ரூட் விளைச்சல் பாதிப்பு: விலை அதிகரிக்க வாய்ப்பு
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 04:14 PM

உடுமலை: வளர்ச்சி தருணத்தில் நிலவிய அதிக வெயிலால் பீட்ரூட் உற்பத்தி பாதித்துள்ளது; தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், சந்தைகளில் விலை அதிகரித்து வருகிறது.
உடுமலை ராகல்பாவி, பள்ளபாளையம், விருகல்பட்டி, பொட்டிநாயக்கனுார், கணபதிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில், கிணற்று பாசனத்துக்கு களிமண் விளைநிலங்களில் பரவலாக பீட்ரூட் சாகுபடி செய்யப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை இந்தாண்டு பெய்யவில்லை. வழக்கத்தை விட அனைத்து மாதங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. இதனால், பீட்ரூட் செடிகள் வளர்ச்சி தருணத்தில் பாதிக்கப்பட்டன.
தற்போது, அறுவடை துவங்கியுள்ள விளைநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளது. வழக்கமாக ஏக்கருக்கு, 7 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது, 2 டன்னாக குறைந்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும். பீட்ரூட்டும் தேவைக்கேற்ப உற்பத்தியாகவில்லை. தற்போது சந்தையில், 25 கிலோ பை ரூ.500-700 வரை விற்பனையாகிறது. விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
