/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொந்த ஊருக்குப் புறப்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள்
/
சொந்த ஊருக்குப் புறப்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள்
ADDED : அக் 19, 2025 10:46 PM

பல்லடம்: தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள், சொந்த ஊர் பயணித்து வருகின்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம், தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. இவற்றில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த, பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று முதல் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
திருப்பூர் பின்னலாடை தொழிலைப் போன்று அல்லாமல், 24 மணி நேரமும் இயங்குவது விசைத்தறி தொழில். இதற்கு ஏற்ப, ஜவுளி உற்பத்தியாளர்களும், தடையின்றி பாவு நுால் வழங்கி தொழில் தொடர்ச்சியாக இயங்க உதவினர்.
கடந்த காலத்தை போன்று கூலி பிரச்னையை ஏற்படாதவாறு, நிர்ணயித்த கூலியை வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக, தொழிலாளர்களுக்கும், 10 முதல் 13 சதவீதம் வரை எங்களால் போனஸ் வாழங்க முடிந்தது.
விசைத்தறி தொழிலில், மணப்பாறை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகப்படியான தொழிலாளர்கள் இங்கு வேலைக்கு வருகின்றனர்.
இதில், 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கேயே வசிக்கின்றனர். மற்றவர்கள், பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீபாவளியை கொண்டாடுவதற்காக நேற்று முதல் தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டனர்.
ஒரு வாரம் விடுமுறைக்கு பின், அடுத்த திங்கட்கிழமை மீண்டும் வேலைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம், என்றார்.