ADDED : நவ 15, 2025 01:16 AM

திருப்பூர்: குமரன் ரோட்டில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம் செல்லும் வழியில் மழை நீர் தேங்கி நிற்பதால் பெரும் அவதி நிலவுகிறது. இதற்கு தீர்வு காண்பது யார் என்ற பிரச்னையில் குழப்பம் நீடிக்கிறது.
திருப்பூர் குமரன் ரோட்டில், மாநகர போலீஸ் வடக்கு உதவி கமிஷனர் அலுவலகம், வடக்கு போலீஸ் ஸ்டேஷன், வடக்கு மகளிர் ஸ்டேஷன் ஆகியன ஒரு வளாகத்தில் செயல்படுகிறது.
இதனருகே, வடக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மாநகர போலீஸ் ஊர்க்காவல் படை அலுவலகம், தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம், கலால் பிரிவு அலுவலகம் உள்ளிட்டவை ஒரு பகுதியில் செயல்படுகிறது.
வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தை ஒட்டிச்செல்லும் பாதை இவற்றுக்கான வழியாக உள்ளது. இந்த பாதையின் மறு பகுதியில் வணிக வரித்துறை அலுவலக வளாகம் உள்ளது.
மழை நாட்களில் குமரன் ரோட்டில் சேகரமாகும் மழை நீர், தாழ்வாக உள்ளதால் இந்த பாதையில் சென்று தேங்குகிறது. மண் பாதையாக இருப்பதால், ஒரு நாள் மழைக்கே இந்த பாதை சேறும் சகதியுமாக மாறி பயன்படுத்த முடியாத அவலம் உள்ளது.
இந்த குறுகலான பாதையில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தங்கள் வழக்கு விசாரணை தொடர்பான வாகனங்களை, மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால், பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
பல துறையினர் பயன்படுத்தினாலும், இதனை யார் சீரமைப்பது என்ற பிரச்னை உள்ளது. குமரன் ரோட்டில் மழை நீர் வடிகால் இல்லாத காரணத்தால், இவ்வழியில் மழை நீர் தேங்குவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
மழை நாட்களில் தடுமாறி, விழுந்து, எழுந்து, கடந்து செல்லும் அவலம் காலம் காலமாக நீடிக்கிறது. எனவே, காவல் துறை அல்லது வணிக வரித்துறையினர் முன்வந்து, இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

