/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உறுப்பு தானம் ஊக்குவிக்க மாணவர் துாதுவர் குழு
/
உறுப்பு தானம் ஊக்குவிக்க மாணவர் துாதுவர் குழு
ADDED : டிச 07, 2025 05:20 AM
திருப்பூர்: உறுப்பு தானத்தை ஊக்குவிக்க திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாணவர் துாதுவர் குழு அமைக்கப்பட உள்ளது.
உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக, தமிழகம் உள்ளது. சாலை விபத்துகளில் மூளைச்சாவு அடைபவர் அதிகளவில் உடல் உறுப்புதானம் செய்யப்படுகிறது.
உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும், சமுதாயத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னை உள்பட அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் துாதுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.விடுபட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், புதியதாக துவங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர் துாதுவர் குழு உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் மனோன்மணி கூறியதாவது:ஒருவர் மூளைச்சாவு அடையும் போது அதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். அத்துடன் சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களிடம் ஆலோசித்து உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம். அதை தொடர்ந்து முறையாக உறுப்புகளை அகற்றி, பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் மாற்ற நோயாளிக்கு பொருத்த வேண்டும்.இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவம் மற்றும் சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்கள், சவால்கள் உள்ளன.
அதுதொடர்பான விரிவான புரிதலை சமூகத்தில் ஏற்படுத்தினால் மட்டுமே உறுப்பு தானத்தை பரவலாக, இன்னமும் அதிகரிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டே மருத்துவக் கல்லுாரிகளில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படைக்குழுக்கள் போல துாதுவர் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

