/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடீர் மழை பொழிந்தது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
திடீர் மழை பொழிந்தது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : நவ 15, 2025 01:12 AM

திருப்பூர்: திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் காலை நேரத்தில் பதிவான துாறல் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. காலை நேரம் என்பதால், பணிகளுக்கு புறப்பட்டவர்கள், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடி பயணித்தனர்.
வடகிழக்கு பருவமழை அக். 16ல் துவங்கினாலும், திருப்பூரில் மழை குறைவாகவே பதிவாகி வந்தது. வரும், 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அவ்வகையில், திருப்பூர், சுற்றுவட்டார பகுதியில், நேற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 7:00 மணிக்கு துாறல் மழை துவங்கியது. இரண்டு மணி நேரம் மழை பெய்தது. திருப்பூரை பொறுத்த வரை பின்னலாடை நிறுவனங்கள், காலை 8:00 முதல் இயங்க துவங்கி விடுகின்றன. காலை பணிக்கு டூவீலரில் புறப்பட்ட பலர், திடீர் மழையால் சிரமத்துக்கு உள்ளாயினர்.
பஸ் ஸ்டாப்களில் காத்திருந்தவர்கள் ஒதுங்க இடமில்லாமல் அவதியுற்றனர். பள்ளி, கல்லுாரிகளுக்கு புறப்பட்ட மாணவ, மாணவியர் குடை, ரெயின்கோட் சகிதமாக பயணித்தனர். மதியம் வரை துாறல் மழை தொடர்ந்தால், நகரம் முழுதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உணரப்பட்டது.

