தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் மாநில முதலிடமே லட்சியம் அரசு பள்ளியில் சிறப்பு பயிற்சி

 பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் மாநில முதலிடமே லட்சியம் அரசு பள்ளியில் சிறப்பு பயிற்சி

 பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் மாநில முதலிடமே லட்சியம் அரசு பள்ளியில் சிறப்பு பயிற்சி


ADDED : ஜூலை 03, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில், மாநில முதலிடம் பெறும் நோக்குடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கு சிறப்புப்பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், திருப்பூர் மாவட்டம், 98.53 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியது. ஆனால், கொரோனா கால 'ஆல்பாஸ்' நடைமுறைக்குப் பின் 2022-ல் பெரும் சறுக்கலைச் சந்தித்தது. 29-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, தேர்ச்சி விகிதமும் 88.46 சதவீதம் ஆகக் குறைந்தது.

பின், கல்வித்துறையின் முயற்சியால், 2023-ல் 11-வது இடத்திற்கும், 2024ல் மீண்டும் சறுக்கி 21-வது இடத்திற்கும் சென்றது. தொடர்ந்து 2025-ல் 17-வது இடத்தைப் பிடித்த திருப்பூர், கடந்தாண்டு (2026) 6 இடங்கள் முன்னேறி மீண்டும் 11-வது இடத்தைப் பிடித்து சாதனைப் பயணத்தைத் தொடர்கிறது.

இந்த முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, 2027 பொதுத்தேர்வில் திருப்பூரை முதல் 5 இடங்களுக்குள் கொண்டு வர மாவட்ட கல்வித்துறை உறுதியாக உள்ளது. இதற்காக, கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தற்போதே துவங்கப்பட்டுள்ளன.

தேர்ச்சி சதவீதம் உயரும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து கூறுகையில், அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் இணைந்துள்ள மாணவர்களின் கற்றல் திறன், மொழிப்பாட அறிவு குறித்து வகுப்பு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மெல்ல கற்கும் மாணவர்களுக்குத் தனிக் கவனமும், நன்கு படிக்கும் மாணவர்கள் முழு மதிப்பெண்பெற காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதிருந்தே வழிகாட்டுவதால் நிச்சயம் 2027-ல் தேர்ச்சி சதவீதம் உயரும் என்றார்.

பாடங்களைத் திணிப்பதில்லை ஆசிரியர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்புக்கு சிறப்பு வகுப்புகளை முன்கூட்டியே துவங்குவதால், காலாண்டுத்தேர்வுக்கு மாணவர்கள் எளிதாகத் தயாராக முடியும். அரையாண்டுத் தேர்வுக்குள், 80 சதவீதம் பாடங்களை முடித்துவிடலாம்.

2027 ஜனவரி மாதத்திற்குள் அனைத்துப் பாடங்களையும் நிறைவு செய்துவிட்டு திருப்புதல் தேர்வுக்குத் தயாராக இது ஏதுவாக இருக்கும். முதன்முறையாகப் பொதுத்தேர்வு எழுதவிருப்பதால் மாணவர்களுக்குப் பாடங்களைத் திணிக்காமல், மெல்லக் கற்றுத் தரும் செயல்பாடாகவே இச்சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு, தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us